5,8ம் வகுப்பு மாணவர்களுக்கும் சிறப்பு வகுப்புகள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.- கல்வியாளர்கள் அதிர்ச்சி
தினந்தோறும் ஒரு பாடத்திற்கு 25 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் தயாரித்து, அதன் அடிப்படையில் தேர்வுகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய கல்விக்கொள்கை வரைவில் 3, 5 மற்றும் 8 ஆகிய வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்குக் கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தமிழக அரசு, புதிய கல்விக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படாத நிலையிலேயே 5 மற்றும் 8 ஆகிய வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவித்தது.
இது, மத்திய அரசின் முடிவு என்றும் தெரிவித்திருந்தது. இந்த அறிவிப்புக்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் வந்தன. தங்கள் எதிர்ப்புக்கான காரணமாக, 5 & 8 வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வுச் சுமை மன அழுத்தத்தை அளித்துவிடும் என்றனர். இதனால், முதல் மூன்று ஆண்டுகளுக்கு இந்த வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடத்தப்படும். ஆனால், தேர்வு முடிவின் அடிப்படையில் தேர்ச்சி நிறுத்திவைக்கப்பட மாட்டாது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். ஆனால், கல்வியாளர்கள் அஞ்சியது போலவே மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படும் முகாந்திரம் தெரிகிறது. கோவை முதன்மைக் கல்வி அதிகாரி, பள்ளிகளுக்கு அனுப்பியிருக்கும் கடிதம் ஒன்று சமூக ஊடகத்தில் பரவிவருகிறது.
அக்கடிதத்தில், "கோயம்புத்தூர் வருவாய் கோட்டத்தில் உள்ள பள்ளிகளில், அனைத்து வேலைநாள்களிலும் 5 முதல் 8 -ம் வகுப்புகளுக்கான மாணவர்களுக்குத் தினந்தோறும் சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும் என்றும், 5 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, காலை 8.30 - 9:15 மணி வரையிலும் மாலை 4:30 முதல் 5.15 வரையிலும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். தினந்தோறும் ஒரு பாடத்திற்கு 25 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் தயாரித்து, அதன் அடிப்படையில் தேர்வுகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது
இந்தக் கடிதம் குறித்து கோயம்புத்தூர் முதன்மைக் கல்வி அலுவலகத்தைத் தொடர்புகொண்டபோது, " இந்த அறிவிப்பு அனுப்பியது உண்மைதான். இந்த ஆண்டு முதலே 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்குப் பப்ளிக் எக்ஸாம் என்பதால், மாணவர்கள் தயாராவதற்கு அவகாசம் குறைவாக இருப்பதால் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன” என்று தெரிவித்தனர்.
இது குறித்து கல்வியாளர் மூர்த்தி பேசுகையில், ``உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பத்தாம் வகுப்புக்கும் 12 -ம் வகுப்புக்கு மட்டும் இருந்த முக்கியத்துவம், இனி தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 5, 8 வகுப்புகளுக்கு மட்டும் முக்கியத்துவம் என்ற நிலை உருவாகும். 5 -ம் வகுப்பு வரை ஒரு தலைமை ஆசிரியர் மற்றும் ஒரு இடைநிலை ஆசிரியர் மட்டும் பணி புரியும் தொடக்கப் பள்ளிகள் தமிழ்நாட்டில் 20 ஆயிரம் பள்ளி மேல் உள்ளன.
5 -ம் வகுப்புக்கு மட்டும் முதன்மை அளிப்பதால் பிற வகுப்புகளில் பயிலும் குழந்தைகளின் கற்றல் செயல்பாடுகள் பாதிக்கப்படும். குறிப்பாக அரசுப் பள்ளிகளுக்கு வரும் குழந்தைகள் கற்றலுக்கு உகந்த சூழல் வாய்க்கப்பெறாத குடும்ப, பொருளாதார நிலையைக் கொண்டவர்கள். இக்குழந்தைகளுக்கு எல்லா வகுப்புகளிலும் கற்றல் கற்பித்தலுக்கு முதன்மை அளிக்கப்பட வேண்டும்.
5, 8 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு முறை என்று வரும்போது பிற வகுப்புக் குழந்தைகளுக்கு முழுமையான கவனம் செலுத்த முடியாத நிலையை உருவாக்கும். குழந்தைத் தொழிலாளர், குழந்தைத் திருமணம் வரிசையில் புதிய, நவீனக் கொடுமை தான் குழந்தைகளுக்குப் பொதுத் தேர்வுக் கொடுமை' என்றார்.
No comments