Breaking News

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் இனி மகப்பேறுடன் கூடிய விடுமுறை

    மகப்பேறு நலன் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியைகள், பெண் ஊழியர்கள் அனைவருக்கும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கும் திட்டத்தை கேரள அரசு அறிமுகப்படுத்த உள்ளது. தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியைகளுக்கும் மகப்பேறு நலன்கள், பலன்கள் கிடைக்க வேண்டும் என்று கேரள அரசு கொண்டு வந்த இந்த அறிவிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கேரள அரசு வெளியிட்ட அறிவிப்பில், கடந்த ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி மாநில அமைச்சரவை கூடி எடுத்த முடிவான தனியார் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து பெண் ஊழியர்கள், ஆசிரியைகளுக்கும் மகப்பேறு நலன் சட்டத்தின் கீழ் பலன் கிடைக்க வேண்டும் என்று அனுமதி கோரி அனுப்பப்பட்ட அறிவிக்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

     இதன் மூலம் மாநிலத்தில் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள், ஆசிரியைகள் 26 வாரங்கள் மகப்பேறு விடுப்பை ஊதியத்துடன் எடுத்து கொள்ள முடியும். மேலும் மகப்பேறு காலத்தில் குழந்தை பிறக்கும் வரை மாதம் ரூ.1,000 மருத்துவச் செலவுக்காக கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளது. மகப்பேறு நலச்சட்டத்தின்கீழ் நாட்டிலேயே முதல் முறையாக தனியார் பள்ளிகளில் பணிபுரியும் பெண் ஊழியர்கள், ஆசிரியைகளுக்கும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு கேரளாவில் வழங்கப்பட உள்ளது.



No comments