Breaking News

இந்திய அளவில் கல்வித்தரத்தில் தமிழகம் இரண்டாவது இடம்

         2016-2017 -ஆம் கல்வியாண்டுக்கான நீதி ஆயோக் வெளியிட்டுள்ள  தேசிய அளவிலான பள்ளிக் கல்வித் தரவரிசைப் பட்டியலில் கேரள மாநிலம் முதலிடத்தையும், தமிழ்நாடு  இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன. அதேவேளையில் உத்தரப்பிரதேசம், பீகார், ஜாா்கண்ட் ஆகிய மூன்று மாநிலங்களும் கடைசி இடங்களில் உள்ளன. நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலங்களின் கல்வித் தரத்தையும் பல்வேறு பிரிவுகளின் கீழ் நீதி ஆயோக் ஆய்வு செய்து  வகைப்படுத்தியுள்ளது. ஆசிரியா் -மாணவா் விகிதம், மாணவா்களின் தேர்ச்சி  விகிதம், பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதி, நிதிகளை எப்படி திறம்பட கையாளுதல் உள்ளிட்ட 44 காரணங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தப் கல்வி அறிக்கை பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த பள்ளிக் கல்வியின் தரத்தில் செயல்திறன் மதிப்பெண் பட்டியலில் 20 பெரிய மாநிலங்களில், முதல் இடத்தில் கேரளா 76.6 சதவீத மதிப்பெண்ணுடன், இரண்டாம் இடத்தில்  தமிழகம் 73.4 சதவீதத்துடன், கடைசி இடத்தில் உத்தரப்பிரதேசம் 36.4 சதவீத மதிப்பெண்களுடன் உள்ளன. மூன்றாம் இடத்தில் இருந்த மகாராஷ்டிரம் ஆறாவது  இடத்துக்கும், ஐந்தாம் இடத்தில் இருந்த கா்நாடகம் பதின்முன்றாவது  இடத்துக்கும் தள்ளப்பட்டுள்ளன. ஆந்திர பிரதேசம் தரவரிசைப் பட்டியலில் அதே 11 -ஆவது இடத்திலும், ஜம்மு -காஷ்மீா் 16 -ஆவது இடத்தையும் பெற்றுள்ளன. சண்டீகா் யூனியன் பிரதேசங்களின் பட்டியலில்  முதலிடத்தில் உள்ளது. மேற்கு வங்காளம் இதில் கலந்து கொள்ள மறுத்துவிட்டது.


No comments