அரசு பள்ளிகளுக்கு மத்திய அரசின் மானியத் தொகை
அரசு பள்ளிகளுக்கு மத்திய அரசின் மானியத்தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. இதைப்பற்றி ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் சுடலைக்கண்ணன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு நடப்பு ஆண்டுக்கான மானியம் வழங்க மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை திட்டக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.அதன்படி பள்ளிகளுக்கு அனுமதிக்கப்படும் மானியத் தொகை அந்தந்த பள்ளியின் வங்கி கணக்குக்கு அனுப்பப்பட வேண்டும். இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறாத 46 தொடக்கப் பள்ளிகள் நூலகமாக மாற்றப்பட உள்ளதால் அப்பள்ளிகளுக்கு மானியம் வழங்கப்படமாட்டாது. இந்த தொகையில் 10 சதவீதத்தை சுகாதாரம், குடிநீர், தூய்மை ஆகியவைக்கு பயன்படுத்த வேண்டும். பள்ளிகளில் இயங்கா நிலையில் உள்ள கற்றல் உபகரணங்களை மாற்ற பயன்படுத்தி கொள்ளலாம். கட்டடங்களை பழுதுபார்த்து பராமரிக்கவும், பாரத பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கவும் பயன்படுத்த வேண்டும். பள்ளியின் தேவைகளை உணர்ந்து, உரிய விதிகளை பின்பற்றி நல்ல பொருட்களை வாங்க வேண்டும். பள்ளியின் தேவைக்கு மட்டுமே மானியத்தை பயன்படுத்தவேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
No comments