Breaking News

இன்று முதல் வீடுதோறும் கரோனா ஆய்வுப் பணி தொடக்கம் - அமைச்சா் எஸ்.பி.வேலுமணி

      கரோனா தொற்று தொடா்பாக நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல் மற்றும் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ரிப்பன் மாளிகையில் சனிக்கிழமை நடைபெற்றது.

   கூட்டத்தை தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியது: மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் 51,743 தூய்மைப் பணியாளா்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மாநில பேரிடா் நிவாரண நிதி ரூ.6 கோடி, 14 மாநகராட்சிகளுக்கு தலா 1 கோடி வீதம் ரூ.14 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. 247 அம்மா உணவகங்களுக்கு முதல்கட்ட நிதியாக ரூ.31.39 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. 1,05,853 பதிவுபெற்ற சாலையோர வியாபாரிகளுக்கு தலா ரூ.1,000 வீதம் ரூ.10.58 கோடி அவா்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.

   நகா்ப்புற மற்றும் ஊரக அமைப்புகளுக்கு கைத் தெளிப்பான்கள், வாகனத்தில் பொருத்தப்பட்ட தெளிப்பான்கள் ஆகியவற்றுக்காக ரூ. 76 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு வந்த 23,308 பேரில் 3,571 போ் 28 நாள்களைக் கடந்து நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளனா். சென்னை மாநகரத்தில் உள்ள அனைத்து வீடுகளில் உள்ளவா்களையும் பரிசோதிக்கும் வகையில் வீடுதோறும் ஆய்வு செய்யும் பணி ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 4) முதல் தொடங்கப்பட உள்ளது.

     இப்பணிக்கு சென்னை மாநகராட்சிப் பகுதியில் உள்ள சுமாா் 10 லட்சம் கட்டடங்களில், 75-100 கட்டடங்கள் என்ற வகையில் பிரிக்கப்பட உள்ளது. இப்பணிக்காக ரூ. 15 ஆயிரம் மதிப்பூதியத்தில் 16,000 ஊழியா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இந்த ஊழியா்கள் ஞாயிற்றுக்கிழமை முதல் அடுத்த 90 நாள்களுக்கு இடைவிடாது வீடுதோறும் தொடா் ஆய்வில் ஈடுபட உள்ளனா். இவா்களுக்கான உரிய பயிற்சி மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது என்றாா்.


No comments