காலை, மாலை இரு வேளைகளிலும், விடுமுறையின்றி செமஸ்டர் தேர்வு - உயர்கல்வித்துறை
அடுத்த கல்வியாண்டில், காலை, மாலை இரு வேளைகளிலும், விடுமுறையின்றி செமஸ்டர் தேர்வு நடத்தப்படும்' என, உயர்கல்வி துறை அறிவித்துள்ளது. சென்னை பல்கலையும், இந்த தேர்வு முறையை அறிவித்துள்ளது.கொரோனா பரவலை தடுக்க, மே, 3ம் தேதி வரை, ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதனால், கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், மே மாதம் நடத்தப்படவிருந்த செமஸ்டர் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டு உள்ளன.'அடுத்த கல்வி ஆண்டின் துவக்கத்தில், முதல் செமஸ்டர் கால ஆரம்பத்தில், தேர்வுகள் நடத்தப் படும்' என, உயர்கல்வி துறை செயலர், அபூர்வா அறிவித்தார்.
இந்நிலையில், அனைத்து கல்லுாரி மற்றும் பல்கலைகளுக்கு, உயர்கல்வி செயலர், அபூர்வா அனுப்பியுள்ள சுற்றறிக்கை: கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு காரணமாக, தேர்வுகள் மற்றும் சிறப்பு வகுப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.இந்த செமஸ்டர் காலத்தில் நடத்த வேண்டிய தேர்வுகளை, அடுத்த கல்வி ஆண்டின் துவக்கத்தில் நடத்துவதற்கு, பல்கலைகளும், கல்லுாரிகளும் திட்டமிட வேண்டும்.
காலை மற்றும் மாலை என, இடைவேளை இல்லாமல், வரிசையாக அனைத்து தேர்வுகளையும் நடத்த வேண்டும். விடுமுறை இல்லாமல், தேர்வுகளை முடிக்க, கல்லுாரிகள் திட்டமிட வேண்டும்.அதற்கு ஏற்ற வகையில், மாணவர்கள் இந்த விடுமுறை காலத்தை பயன்படுத்தி, தேர்வுக்கு தயாராவதற்கான வழிமுறைகளை, கல்வி நிறுவனங்கள் சார்பில், மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை பின்பற்றி, சென்னை பல்கலையில் தேர்வுகள் நடத்தப்படும் என, பல்கலை பதிவாளர் சார்பில், கல்லுாரிகள், பல்கலைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
No comments