பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை மே 26 முதல் 5 நாட்களில் நடத்தி முடிக்க தமிழக அரசு ஆலோசனை
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை மே 26 முதல் 5 நாட்களில் நடத்தி முடிக்க தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரலில் பிளஸ் 2, பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்துவிடும். இந்தாண்டு கொரோனா தொற்று பரவியதால், மார்ச் 22ம் தேதி ஒருநாளும், பின் மார்ச் 25 முதல் ஏப்.14 வரை தொடர்ந்தும் ஊரடங்கு நாடு முழுவதும் அமலில் இருந்தது.
பிளஸ்2தேர்வுகள் முடிந்து விட்ட நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு துவங்குவது தடைபட்டு உள்ளது.தற்போது ஊரடங்கு 2வது கட்டமாக மே 3 வரை நீடிக்கப்பட்டுள்ளதால், அடுத்து எப்போது தேர்வை நடத்தலாம் என கல்வி, தேர்வுத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
மே 3ல் ஊரடங்கு முடிந்தாலும், கொரோனா பாதிப்பு முற்றிலும் முடிவுக்கு வர எத்தனை நாளாகும் என தெரியவில்லை.புதிய கல்வி ஆண்டு பாதிக்காத வகையில் பொதுத் தேர்வை நடத்தி முடித்துவிட வேண்டும் என கல்வி அதிகாரிகள் கருதுகின்றனர். எனவே, பத்தாம் வகுப்பு தேர்வை மே 26 முதல் 30க்குள் தொடர்ந்து 5 நாட்களில் நடத்தலாம். உடனே விடைத்தாள் திருத்தும் பணியை துவக்கலாம் என அரசுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளனர்.
மேலும் பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் பணியை மே 3வது வாரத்திலேயே துவங்கலாம். 120க்கும் மேற்பட்ட கல்வி மாவட்ட அதிகாரிகள் உள்ளதால் பத்து நாட்களில் இப்பணியையும் முடித்து விரைவாக தேர்வு முடிவை ஜூன் மாதத்திற்குள்ளாக 10, 12வது வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிடலாம். இதனால் கல்விஆண்டு அதிகம் பாதிக்காத வகையில் வகுப்புகளை துவக்கலாம் எனவும் கருதுகின்றனர். அரசு ஒப்புதல் கிடைத்ததும் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments