உதவி பேராசிரியர் நியமனத்திற்கு, எழுத்து தேர்வு நடத்த வேண்டும் என கோரிக்கை
உதவி பேராசிரியர் நியமனத்திற்கு, எழுத்து தேர்வு நடத்த வேண்டும் என, பேராசிரியர்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அரசு கல்லுாரிகளில் காலியாக உள்ள, 2,331 உதவி பேராசிரியர்கள் பணிக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் வழியாக பணி நியமன நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. எழுத்து தேர்வு எதுவும் இல்லாமல், நேர்முக தேர்வு வழியாக ஆட்களைநியமிக்க, தேர்வு வாரியம் முடிவு செய்துஉள்ளது. இந்த முறைக்கு, கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. பணி நியமனஅறிவிப்பை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், கல்லுாரி பேராசிரியர்கள் அங்கம் வகிக்கும், தரமான கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான அமைப்பு தலைவர் மனோகரன், முதல்வருக்கு எழுதியுள்ள கடிதம்:
இந்த பணிக்கான விதிமுறைகள், தரமான பட்டதாரிகளை தேர்வு செய்ய வழி வகுக்காது. உதவி பேராசிரியர் பணிக்கு, அடிப்படை கல்வி தகுதியான, பிஎச்.டி., மற்றும், 'நெட், செட்' தேர்வு தேர்ச்சி தேவை.ஆனால், அடிப்படை கல்வி தகுதிக்கே, ஆசிரியர் தேர்வு வாரியம் மதிப்பெண் வழங்குவதாக கூறுவது, வேடிக்கையாக உள்ளது. ஓர் உதவி பேராசிரியர், எட்டு ஆண்டுகள் பணி முடித்தால், அவர், இணை பேராசிரியர் பதவிக்கு தகுதியானவர். இந்த பணி நியமனத்தில், ஒவ்வோர் ஆண்டு அனுபவத்துக்கும், இரண்டு மதிப்பெண் என, அதிகபட்சமாக, ஏழு ஆண்டுகளுக்கான, 15 மதிப்பெண் வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால், உதவி பேராசிரியர் என்ற நுழைவு நிலை பதவிக்கு, இணை பேராசிரியருக்கான பணி அனுபவம் கேட்கப்பட்டுள்ளது. கல்லுாரிகளில் பணியாற்றிய அனுபவம் இருந்தால், அதற்கு மதிப்பெண் தருவதாக கூறப்பட்டுள்ளது. கல்லுாரிகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்களுக்கு இணையாகவும், அதற்குமேலாகவும் அனுபவம் பெற்ற இளம் பட்டதாரிகள், தொழில்நுட்ப அறிவுடனும், ஆராய்ச்சி படிப்புகளுடனும் காத்திருக்கின்றனர்; அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மேலும், நேர்காணல் நடத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இதில், யாருக்கு எவ்வளவு மதிப்பெண் கிடைக்கும் என்பதில், வெளிப்படை தன்மை இருக்காது. எனவே, ஆசிரியர் தேர்வு வாரியம் சரியான வழிமுறைகளையும், பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., விதிமுறைகளையும் பின்பற்றி, எழுத்து தேர்வு நடத்தி, தகுதியானவர்களை நியமிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
No comments