Breaking News

எங்களுக்கு சுகாதாரமான பள்ளி வேண்டும் - ஐகோர்ட்-ல் வழக்கு தொடர்ந்த ஆறு வயது சிறுமி

    திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டாரம், மீஞ்சூர் ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை கல்வி கற்பதற்கு ஏற்ற சூழ்நிலையை ஏற்படுத்தும் வகையில், சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும் பள்ளி  கட்டிடத்தை புதுப்பிக்க வேண்டும் என ஆறு வயது  மாணவி அதிகை முத்தரசி (6) சார்பில் அவரது தந்தை பாஸ்கரன் ஐகோர்ட்- ல் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், கோயில் அருகே உள்ள மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகம் சட்டவிரோத செயல்கள் நடைபெறும் இடமாக உள்ளது. சுத்தமாக இல்லாத சூழ்நிலை ஏற்பட்டு பள்ளியில் பயிலும் மாணவ மாணவியருக்கு உடல் நலக்குறைவு ஏற்படுகிறது. பள்ளி கட்டடத்தை புதுப்பிக்க  கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் அரசு அதிகாரியிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.

    திருவள்ளூர் கலெக்டர்,  பொன்னேரி தாசில்தார், பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர், திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, தொடக்கக்கல்வி அலுவலர், உள்ளிட்டோருக்கு பள்ளியை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தனது மனுவில் கோரியுள்ளார். இந்த வழக்கு  ஐகோர்ட் நீதிபதிகள் சத்யநாராயணன், சேஷசாயி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    வழக்கை விசாரித்த நீதிபதிகள், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அனைவரும் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 16ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அன்றைய தினம் திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, பொன்னேரி கல்வி மாவட்ட அதிகாரி, மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய உதவி தொடக்கக் கல்வி அதிகாரி ஆகியோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.



No comments