Breaking News

இந்த ஆலயத்தை மகிமையால் நிறையபன்னுவேன்.

    நெல்லை நாட்டின் மேற்கு பகுதியிலிருக்கும் கோவிலூற்று என்னும் கிராமத்தை சுற்றிலுமிருந்த பெரிதும் சிறிதுமான பல ஊர்களில் கிறிஸ்து நாதரின் நற்செய்தி நல்லூர் மிஷினெரிமார்களாலும் உபதேசியாராலும் பிரசிங்கிகப்பட்டதின் பயனாக, சிறுசிறு கிறிஸ்தவ சபைகள் தோன்றியதெனினும், கோவிலூற்று வாசிகள் மட்டும் பல ஆண்டுகளாக சத்தியத்தை எதிர்த்து நின்றனர். ஆயினும் 'கோட்டை விழும் காலமும்' சமீபித்தது. நல்லூரில் முதல் மிஷினெரியும் பிரசித்தி மிகப் பெற்றவருமான P. P . ஷாப்வ்ற்றர் ஐயரும் ஊழியரும் அவ்வூரில் செய்து நிறைவேற்றிய தீவிர சுவிசேஷ பிரச்சாரம் 1847,48 ல் பலன் தர ஆரம்பித்தது. அடுத்த ஆண்டுக்குள் அங்கு ஒரு சிறு சபை தோன்றிவிட்டது. அச்சபையின் பிரமுகர்களிலொருவரும் சபைத் தலைவருமாயிருந்தவர் மனுவேல் நாடார் என்று மிஷினெரி ரிக்கார்டுகளில் குறிக்கப்பட்டுள்ளார். இவரைப்பற்றி நாம் அறியக்கூடியவை, அவர் ஒரு தனவந்தர் என்பதும், செல்வாக்கு மிக்கவரென்பதும் , தன்னை மீட்டுக்கொண்ட இரட்சபெருமான் மீது எல்லையற்ற பக்தியும் அன்புமுடையவரென்பதுமாகும். கோவிலூற்று முழுவதும் இயேசுவுக்குச் சொந்தமாகவேண்டு மென்ற தீராத வாஞ்சைமிக்கோராகித், தான் அறிந்த நற்செய்தியை ஓயாது எடுத்துக் கூறுவதன் மூலமாயும் தம் உறவினர் பலரை அவர் சபையிற் சேர்க்கக்கூடியவராக இருந்தார் . சபை சிறுகச்சிறுக வளர்ந்தது. ஒரு ஜெபாலயமும் கட்டப்பட்டது.

    1850 - ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15- ம் நாள், நல்லூர் உதவி மிஷினெரியான ஸெப்ற்றிமஸ் ஹாப்ஸ் ஐயர் (Rev . Septimus Hobbs ) அந்த ஜெபாலயத்தைப் பிரதிஷ்டை செய்யச் சென்றார். அன்று விடிந்ததிலெருந்து விடா மழை; குதிரையின் மீதமர்ந்து சென்ற அவர் தெப்பமாய் நனைந்துவிட்டார். சேற்றிலும் சகதியிலும் மிகுந்த சிரமத்துடன் பிரயாணம் செய்து கோவிலூற்றை யடைந்தார். குறிக்கப்பட்ட நேரத்துக்குமேல் வெகு நேரமாயிற்று. பிரதிஷ்டைக்கு வந்த சபையார் வீடுகளுக்குச் சென்றிருப்பாரோ வென்று பயந்து கொண்டே வந்த ஹாப்ஸ் ஐயருக்குச் சபையாரனைவரும் கொட்டும் மழையிலும் அச்சிற்றாலயத்தில் காத்திருந்ததைக் கண்டதும் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கோ அளவில்லை. பிரதிஷ்டை முடிந்தது; அப்பொழுது மணி இரவு ஒன்பது.

  அத்தகைய ஆர்வமுள்ள மக்களைக் கொண்ட சபை தன் வருக்காலத்தைப் பற்றி மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்ததில் ஆச்சரியமில்லை. மனுவேல் நாடாரின் முயற்சியினால் அதிலும் அவரது செல்வாகினிமித்தம், மேலும் சிலர் கிறிஸ்து சபையிற் சேர்ந்தார்கள் (1855). அதில்தான் குறையிருந்தது. தனவந்தரும் சொற்சக்திமிக்கோருமான அவருக்கு பயந்தும், அல்லது அவரை நயந்துகொள்ள விளைந்துமே இம்மக்கள் சபையிற் சேர்ந்தனரேயன்றி கிறிஸ்துநாதரால் கவரப்பட்டல்ல . மேலும், ஷாப்வ்ற்றார் ஐயர் மாற்றப்பட்டு, அவருக்குப் பின்வந்த கிளார்க் (Rev . W . Clark ) ஐயரால் அப்புதுக் கிறிஸ்தவர்களுக்கு நற்போதனை கொடுக்கத்தக்க திறமையுள்ள உபதேசிமாரை அச்சபைக்கு நியமிக்கக் கூடாதுபோயிற்று. நியமிக்கப்பட்ட உபதேசிமாரும் மனுவேல் நாடாருக்கு பயந்து பயந்துதான் கடமையாற்ற வேண்டியதிருந்தது.

   இதற்கிடையில், கோவிலூற்றில் பெரிதும், உறுதியும் அழகும் நிறைந்தவோர் ஆலயத்தைக் கட்ட வேண்டுமென்று மனுவேல் நாடார் தீர்மானித்தார். கிளார்க் ஐயரும் சம்மதம் கொடுத்தார் ரூ . 4500 - க்கு எஸ்ற்றிமேட் தயாரானது. செங்கல்லும் சுண்ணாம்பும் கொண்டு 50 அடி நீளமும் 30 அடி அகலமுள்ள கட்டடமாக அது கட்டப்படவெண்டுமென்று தீர்மானமானது. முன் மண்டபமும் கிரதியரறையும் வேறு. ஆலயத்தைச் சுற்றிச் செங்கல் - சுண்ணாம்பு மதில். சபையார் ரூ . 60 கொடுக்கச் சம்மதித்தனர் . மீதி ரூ . 4440 -ம் வசூலித்து கொள்ள தீர்மானம் ! 1856 ஜூலை 16 - ல் தியதி நல்லூர் கிளார்க் ஐயர் இப்பெரிய ஆலயத்திற்கு அஸ்திவாரம் அமைத்தார். மனுவேல் நாடார் தலைமையில் கட்டுமான வேலை துரிதமாக நடந்தேறியது. மக்கள் மகிழ்ச்சியுடனிருந்தனர்.

   ஆனால், 1857 - ம் ஆண்டு மனுவேல் நாடார் திடீரென்று மரணமடைந்தார். அது ஒரு பெரிய அதிர்ச்சி. அதிலும், அவருக்காகக் கிறிஸ்து சபையிற் சேர்ந்த புதுக் கிறிஸ்தவர்களுக்கு ஒரு பேரதிர்ச்சியாக முடிந்தது. அவர்களுடைய 'அஸ்திபாரங்கனைத்தும் நிர்மூலமாயின!'. தம்மை உண்மையாய் சேவித்துத் தமக்காக பக்தி வைராக்கியம் காண்பித்த மனுவேல் நாடாரை கிறிஸ்தவர்களின் கடவுள் காத்துக்கொள்ளவில்லையென்று தெய்வத்தின் மீதுள்ள நம்பிக்கை தளர்ச்சியடைய இடங்கொடுத்துவிட்டார்கள்.

   கிறிஸ்தவர்களையும், குறிப்பாக மனுவேல் நாடாரையும் அவர் மூலமாகத் திருசபையிற் சேர்ந்த புதுக்கிறிஸ்தவர்களையும் பகைத்த விரோதிகள் அவர்களுக்கு விரோதமாய் எழும்பினர். கிறிஸ்தவர்களைப் பாதுகாக்க இப்பொழுது மனுவேல் நாடாரில்லை. அப்பகைஞர் பற்பல விதமாக அவர்களைத் துன்புறுத்தி, அவர்களில் 35 பேர் மீது, வீடுகளை திறந்து கொள்ளையடித்ததாகப் பொய்க் குற்றம் சாட்டினர். முப்பத்தைவரும் போலீசாரால் கைது செய்யப் பட்டுச் சிறையிலடைக்கப்பட்டனர். சிறையிலும் அவர்கள் கொடூரமாக நடத்தப்பட்டார்கள். வழக்கு வெகுநாள் நடந்தது. அது முடிவதற்குள் புதுக்கிறிஸ்தவர்களும் பழைய சபையினரிற் சிலரும் மறுதலித்துவிட்டனர்! வழக்கு பொய்யானது என்று ரூபகாரமாயிற்றெனினும், அந்த முப்பத்தைவரிலும் அநேகர் தங்கள் பழைய மதத்துக்கே திருப்பிப்போயினர்! (Jl . 1857 Nov . 13 - W Clark ). அதன் பின் துன்பம் ஓய்ந்தது. ஆலயக் கட்டுமானமோ நின்று விட்டது. 

       இனி நல்லூர் சேகரத்தின் மேற்கு, தென்மேற்கு பகுதிகளில் சரியான  முறையில் கண்காணிப்புச் செய்யாவிடில் மற்ற சபைகளும் பாதிக்கப்படும் என்றுணர்ந்த கிளார்க் ஐயர், புலவனூரை ஒரு குருபீடமாக்கி, D. ஞானமுத்து ஐயரை அங்கு குடியிருந்து கொண்டு சபைகளைக் கவனித்து வரும்படி ஏற்பாடு செய்தார் (1858). ஞானமுத்து ஐயர் வெகு திறமைசாலி. திருநெல்வேலி மக்களில் குரு பட்டம் பெற்றவர்களில் முதலாவதானவர் (1847). அவருடைய ஓயா உழைப்பினாலும், திறமையான மேற்பார்வையினாலும் புலவனூர் வட்டாரச் சபைகள் தீவிர வளர்ச்சியடைந்தன. கோயிலூற்று சபையிலும் ஞானஸ்நானம் பெற்ற கிறிஸ்தவர்கள் தொகை 52 ஆக உயர்ந்தது (1861 டிசம்பர் ). 

  புலவனூர் சேகர வளர்ச்சியைக் கண்ட பகைவர் மறுபடியும் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தத் தொடங்கினர். மேட்டூர், ஆவுடைய நாடானூர், புலவனூர், கலியாணிபுரம், பாவூர், புளியரை, கோவிலூற்று என்னும் சபைகளுக்கு அது ஒரு பயங்கர சோதனைக் காலம் (1862 ஏப்ரல் - ஜூன் ). 

    அக்காலத்தில், வசந்தராயர் என்றொரு இந்து வீரன் தோன்றி பிரிட்டிஷ் ஆதிக்கத்தை அழித்துக், கிறிஸ்து மார்க்கத்தை இந்தியாவிலிருந்து அகற்றிவிடுவார் என்ற ஒரு வதந்தி நாடெங்கும் பரவினது. அத்துடன் முத்துக்குட்டி என்பவர் ஆரம்பித்த நாராயணசாமி வணக்கமும் மிகுந்த செல்வாக்குடன் பரவிக் கிறிஸ்தவர்களிலும் அநேகரை இழுத்துக் கொண்டது. மேலும், கொடிய காலரா வேறு தோன்றிவிட்டது. காலரா தோன்றியதற்குக் காரணம் மக்களிற் பலர் கிறிஸ்தவர்களானதினிமித்தம் சாமிகளும், அம்மன்களும் கோபித்துக்கொண்டு, விஷ பேதியை அனுப்பிவிட்டன வென்று மக்கள் நம்பினார்கள் . எனவே, மறுபடியும் கிறிஸ்தவர்களுக்குக் கொடிய துன்பமுண்டாயிற்று. (1862- செப்டம்பர் - டிசம்பர் ) கோவிலூற்று, புலவனூர், புளியரை,பாவூர் முதலிய சபைகளில் அநேகர் மறுதலித்துவிட்டனர்.

   சிறுத்துப்போன கோவிலூற்று சபையில் தூண்களாய் நின்றவர்கள் மனுவேல் நாடாரின் மக்கள். அவர்களை மறுதலிக்கச் செய்யவேண்டுமென்று தீர்மானித்த பகைவரும் கிறிஸ்துவைப் புறகணித்துவிட்ட மக்களிற் சிலரும், மறுபடியும் கிறிஸ்தவர்களை உபத்திரவித்தார்கள். எனவே, மேலும் சிலர் மருள விழுந்து விட்டார்கள். ஞானமுத்து ஐயர், இவையெல்லவற்றின் மத்தியிலும், கோவிலூற்று ஆலயத்தைக் கட்டி முடிப்பதிலேயே கண்ணுங் கருத்துமாக இருந்தார். சபை சிறுத்துவிட்டதால் ஆலயத்தைச் சிறியதாகக் கட்டினால் போதுமென்று அவர் எண்ணவேயில்லை; யாராவது அப்படிப் பேசிவிட்டால் மிகுந்த கோபம் கொள்வார் (H . Y . R . 1863). ஆனால், பணம்? அது கிடைப்பதுதான் மிகுந்த கஷ்டமாயிருந்தது. நீலகிரியிலும், பின் திருவாங்கூரிலும் பணியாற்றிய (கிளார்க் ஐயரின் சகோதரியான ) மிஸ் கிளார்க் ரூ .465 கோவிலூற்று ஆலயக் கட்டுமானத்துக்காக அனுப்பினதாக மட்டும் ஒரு குறிப்பு உண்டு (டிசம்பர் 1863). ஆயினும் , ஞானமுத்து ஐயர் ஆலயத்தைக் கட்டிமுடிப்பதில் முழுமூச்சுடன் உழைத்து டிசம்பர் 1868 - ல் வெற்றி பெற்றார். கோவிலூற்றிலும் அசைவுண்டாயிற்று. எழுபெத்தேழுபேர் ஞானஸ்நான ஆயத்தக்காரராகச் சேர்க்கப்பட்டனர். மறுதலித்தவர்களிலும் ஐவர் மனந்திரும்பினார்கள். இதற்கிடையில் கிளார்க் ஐயர் மாற்றப்பட்டு, அவருடைய இடத்தில் H . டிக்சன் ஐயர் நல்லூர் மிஷினெரியானார்.

      டிசம்பர் 23, 1868 புதன்கிழமை கோவிலூற்று விழாக்கோலம் பூண்டது. புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட ஆலயம் அலங்காரங்களுடன் இலங்கியது. கோவிலூற்றின் சிறு சபையாரும், ஞானஸ்நான ஆயத்தக்காரரும், பக்கத்துக் கிராமச் சபைமக்களும் நல்லூர் ஆண் பெண் போர்டிங் பள்ளிகளின் மாணவ மாணவிகளும் - ஆக சுமார் 400 பேர் ஆலயத்தை நிறைத்துவிட்டார்கள். மதியம் 11 மணிக்கு பிரதிஷ்டை ஆராதனை ஆரம்பித்தது. நல்லூர் டிக்ஸன் ஐயர், டிக்ஸன் அம்மாள், சுரண்டை ஹானிஸ் ஐயர், ஹானிஸ் அம்மாள், உக்கிரன் கோட்டை அந்தோனி ஜேம்ஸ் ஐயர், சீவலசமுத்திரம் A . சாமுவேல் ஐயர், ஞானமுத்து ஐயர் அனைவரும் வந்திருந்தார்கள். விசாரணை உபதேசியார் T. சிமியோன் பிரதிஷ்டைக் கீதமொன்று தானே எழுதிக் சபையாருக்குக் கற்பித்திருந்தார். அது பாடப்பட்டது. ஹானிஸ் ஆகாய் 2:7 - ன் பேரில் பிரசங்கம் செய்தார். ஞானமுத்து நான்கு குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் கொடுத்தார். டிக்ஸனும் சாமுவேலும் நற்கருணை ஆராதனை நடத்த, ஜேம்ஸும் ஞானமுத்தும் அதில் உதவி செய்தார்கள் . 180 பேர் நற்கருணை பெற்றார்கள்.

      ஆலயம் கிழக்கு முகம்; ஓடு போட்ட முகடு; கிராதியுடன் நீளம் 65 1/2 அடி, அகலம் 28 அடி, பக்கத்து அறைகள் 9X9 உள்ளே பத்துத் தூண்கள், எட்டு கமான் வளைவுகள், ஆலய அழகு கண்கொள்ளக் காட்சி. ஆலயத்துக்கான செலவு ரூ . 4500. அன்று அவ்வளயத்தின் உபயோகத்துக்காகப் பிரதிஷ்டை பண்ணப்பட்ட நற்கருணைப் பாத்திரங்கள் முன்னாள் மிஷினெரி கிளார்க் ஐயரின் அன்பளிப்பு. அன்று ஞானஸ்நானத்துக்கு ஆயத்தப்பட்ட எழுபத்தேழு பேரும், மறுதலித்து மனந்திரும்பின ஐந்துபேரும் திருச்சபை ஜாபிதாவில் பெயரெழுதப்பட்டார்கள்.



No comments