Breaking News

Rapid Test பரிசோதனை மூலம் Corona வைரஸ் உள்ளதா என எவ்வாறு கண்டறியப்படுகிறது?

    ஆர்.டி.,-பி.சி.ஆர்., முறையில் கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டு பிடிக்க பெரும்பாலும் தொண்டைச்சளி மாதிரி சேகரிக்கப்படும். ஏனென்றால் அதில் தான் வைரஸ்கள் அதிகளவு காணப்படும். இம்முறையில் இருக்கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. முதல் கருவியில் சளி மாதிரி இடப்பட்டு, அதிலிருக்கும் பாக்டீரியாக்கள் உள்ளிட்ட இதர நுண்கிருமிகள் நீக்கப்பட்டு, வைரஸ் வகைகள் மட்டும் தனியாக பிரித்தெடுக்கப்படும். பின்னர் இன்னொரு கருவியில் இவ்வைரஸ்கள் இடப்பட்டு ஆர்.என்.ஏ., அடிப்படையில் கொரோனா வைரஸ் உள்ளதா என ஆய்வு நடக்கிறது. இது மிகத்துல்லியமான முடிவை தரும்.

    ஆனால் ரேபிட் முறை முற்றிலும் மாறுபட்டது. இப்பரிசோதனையின் உண்மையான பெயர் இம்முனோகுரோமோட்டாகிராபி. விரல் அளவில் உள்ள சிறிய கருவி தான் ரேபிட் கிட். கொரோனா வைரஸின் ஆன்டிஜன், நமது ரத்தத்தில் உள்ள ஆன்டிபாடியை சேர்ப்பதன் மூலம் பாதிப்பு இருக்கிறதா, இல்லையா என்பது உறுதி செய்யப்படும் முறை இது. இதற்காக இக்கருவியில் ஏற்கனவே கொரோனா (கோவிட்-19) வைரஸின் ஆன்டிஜன் வைக்கப்பட்டிருக்கும். கருவியில் உள்ள சிறிய துளையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுபவரின் ஒரு சொட்டு ரத்தம், இரு சொட்டு 'பப்பர்' எனும் ரசாயனம் இடப்படும். ஒருவேளை அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தால், அதை முறியடிக்க அவரது உடலில் ஏற்கனவே ஆன்டிபாடி உருவாகி இருக்கும்.

   அது கருவியில் உள்ள ஆன்டிஜனுடன் சேர்ந்து, குறிப்பிட்ட நிறத்தை தோற்றுவித்து, பாதிப்பை உறுதி செய்யும். பாதிப்பு இல்லையென்றாலும் துல்லியமாக காட்டிக்கொடுத்து விடும்.அதுமட்டுமின்றி பாதிப்பு உறுதியானால், உடலுக்குள் வைரஸ் வந்து எவ்வளவு நாட்கள் ஆகி இருக்கும் என்பதையும் இச்சோதனையில் அறியலாம். பொதுவாக ஒரு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் அதை எதிர்த்துப்போராட மனித உடலில் முதலில் உருவாவது ஐ.ஜி.எம்.,என்னும் ஆன்டிபாடி. ஒரு வாரம் வரை சண்டையிட்டு இது அழிந்துவிடும்.

     ஒரு வாரத்திற்குப்பின் ஐ.ஜி.ஜி., என்னும் ஆன்டிபாடி தோன்றி போராடும். ரேபிட் சோதனை முடிவு ஐ.ஜி.எம்.,ஐ காட்டினால், பாதிப்பு உருவாகி ஒரு வாரம் முடியவில்லை என்று அர்த்தம். ஐ.ஜி.ஜி.,யை காட்டினால் ஒரு வாரத்தை கடந்துவிட்டது என்று அர்த்தம். இதன் அடிப்படையில் பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை அளிக்கலாம்.


No comments