Breaking News

மேலும் நான்கு வாரங்களுக்கு அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூட மத்திய அமைச்சர்கள் குழு பரிந்துரை

    இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5000ஐ தாண்டியுள்ளது. உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 149 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் 402 பேர் குணமடைந்தனர். கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வருவதால், மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது.


    இதற்கிடையே, மார்ச் 24-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 21 நாட்கள் ஊரடங்கு ஏப்ரல் 14 ஆம் தேதியுடன் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால், பாஜக ஆளும் உத்தரபிரதேசம் உட்பட பல மாநிலங்கள் தாங்கள் நீட்டிப்பை விரும்புகின்றன. மாநிலங்களின் முன்மொழிவை பரிசீலிப்பதாக அரசாங்க வட்டாரங்கள் கூறியுள்ள நிலையில், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் திங்களன்று சரியான நேரத்தில் தேசிய நலனுக்காக ஒரு முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.


   இதற்கிடையே, நேற்று செவ்வாய் கிழமை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் மத்திய அமைச்சர்கள் குழு கூடியது. இந்த கூட்டத்தில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரயில்வேத்துறை அமைச்சர் பியுஷ் கோயல் உள்ளிட்டடோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தின் போது, அனைத்து கல்வி நிறுவனங்களும் இன்னும் நான்கு வாரங்களுக்கு மூடப்பட வேண்டும், மேலும் மதக் கூட்டங்களுக்கான தடையும் இதே காலத்திற்கு நீட்டிக்கப்பட வேண்டும் என அமைச்சர்கள் குழு முன்மொழிந்துள்ளது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும், இல்லையென்றாலும் அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூடுவதை நீட்டிக்க மத்திய அமைச்சர்கள் பரிந்துரைத்தனர்.


     இதன் மூலம், பெரும்பாலான பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விரைவில் கோடை விடுமுறை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொது மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடும் இடங்கள் , மத வழிபாட்டு தலங்கள் போன்ற இடங்களை உன்னிப்பாக கண்காணிக்கப்பட வேண்டும். ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பை அதிகரிக்கவும் அமைச்சர்கள் பரிந்துரைத்தனர்.


     தற்போதைய ஊடரங்கு முடிவடையும் போதும், ​​ஏப்ரல் 14 முதல் குறைந்தது நான்கு வாரங்களுக்கு ஷாப்பிங் மால்கள், சாதாரண செயல்பாடுகளை மீண்டும் தொடங்க அனுமதிக்கக்கூடாது என்றும் மத மையங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து பரிந்துரைக்கப்பட்டுள்ளது.



No comments