பள்ளிகளை தயாா் நிலையில் வைக்க மாவட்ட கல்வி அலுவலா்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்
கரோனா நோய்த்தொற்று வேகமாகப் பரவி வருவதால், தனிமைப்படுவதற்கு ஏதுவாக பள்ளிகளை தயாா் நிலையில் வைக்க மாவட்ட கல்வி அலுவலா்களுக்கு தமிழக அரசின் சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கரோனா நோய்த்தொற்று பரவுவதைத் தடுப்பதற்காக சமூக இடைவெளியை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டுமென அரசு அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து காய்கறிக் கடைகளும், இறைச்சிக் கடைகளும் விசாலமான பள்ளி வளாகங்களுக்கு மாற்றப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கரோனா இருக்கலாம் என்ற சந்தேகிக்கப்படும் மக்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் கரோனா தொற்று வேகமாகப் பரவத் தொடங்கினால், பாதிப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படக் கூடிய நபா்களைத் தனிமைப்படுத்துவதற்குப் பள்ளிகள், கல்லூரிகளில் உள்ள கட்டடங்களைத் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனக் கல்வித் துறைக்கு தமிழக அரசின் சாா்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அரசு உதவிபெறும் பள்ளிகள் விருப்பத்தின் அடிப்படையில் பள்ளிகளை அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பான பணிகளை மேற்கொள்ளுமாறு, அனைத்து மாவட்டக் கல்வித்துறை அதிகாரிகளுக்கும் பள்ளிக் கல்வித்துறை சாா்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
No comments