எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு மதிப்பெண் தான் எதிர்காலத்தில் முக்கிய பங்கு வகிக்கும் - அமைச்சர் செங்கோட்டையன்
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கண்டிப்பாக நடக்கும் என்றும், ஒருநாள்விட்டு ஒருநாள் தேர்வு எழுதுவது எப்படி? என்பது குறித்து அட்டவணையை கல்வித்துறை வெளியிடும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தொடர்பாக, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மூத்த அமைச்சர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு மதிப்பெண் தான் எதிர்காலத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதால், அந்த தேர்வு கண்டிப்பாக நடக்கும். இதைத்தான் கூட்டத்தில் முடிவு செய்து இருக்கிறோம். மே 3-ந்தேதி வரை ஊரடங்கு இருக்கிறது. ஊரடங்கு முடிந்ததும், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எப்படி நடத்தலாம்? என்பதை முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கல்வித்துறை மூலம் எடுத்து செல்ல உள்ளோம். அதன்பிறகு தேதிகள் அறிவிக்கப்படும். ஊரடங்குக்கு பிறகுதான் தேர்வு குறித்த அட்டவணை வெளியிடப்படும்.
இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலை, தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் நிலவி இருக்கிறது. அதற்கேற்ப முடிவுகள் மேற்கொள்ள உள்ளோம். பிளஸ்-2 தேர்வுகள் முடிந்துவிட்டன. அதேபோல், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வும் நடத்தப்பட இருக்கின்றன. அதை குறைந்த காலத்தில் மாணவர்கள் எழுதி முடிப்பதற்கு ஏதுவாக ஒரு நாள்விட்டு ஒரு நாள் தேர்வுகள் எழுதுவது எப்படி? என்பது குறித்த அட்டவணையை கல்வித்துறை வெளியிடும்.
ஊரடங்கு முடிந்ததும், பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆசிரியர்களை கொண்டு ஏற்பாடு செய்யப்படும். அதற்கான அட்டவணையும் வெளியிடப்பட இருக்கிறது. 24-ந்தேதி நடந்த பிளஸ்-2 தேர்வை 34 ஆயிரத்து 742 பேர் எழுத முடியாமல் போனதாக வந்த புகாரின் அடிப்படையில், அவர்களுக்கான வாய்ப்பு துறை சார்பில் வழங்கப்படும்.
தனியார் பள்ளிகளை பொறுத்தவரையில் ஊரடங்கு காலத்தில் கல்வி கட்டணத்தை கட்டாயம் வசூல் செய்யக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. அதனை மீறி யாராவது கட்டாய கல்வி கட்டணம் வசூல் செய்தால், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு மாணவர்களுக்கு கல்வி, பொதிகை, பாலிமர் தொலைக்காட்சிகள் வாயிலாக நாள் ஒன்றுக்கு ஒரு மணி நேரம் கல்வி கற்றுத்தரப்படுகிறது. யூ-டியூப் மூலம் கல்வியை மேலும் கற்றுக்கொள்ளவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு, திருத்தும் பணிகள் இருப்பதால் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளி திறப்பு தள்ளிப்போகுமா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ‘ஏற்கனவே மாணவர்கள் விடுமுறையில் தான் இருக்கிறார்கள். பெற்றோர், கல்வியாளர்களின் கருத்து அந்த நேரத்தில் கேட்கப்படும். அது முதல்-அமைச்சரின் கவனத்துக்கு எடுத்து செல்லப்படும்’ என்றார்.
No comments