TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்விற்கு தடை விதிக்கப்படுமா
TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்விற்கு தடை விதிக்கப்படுமா
சமீபத்தில் TNPSC குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்தது. உடனே TNPSC ஆணையம், தவறு செய்த 99 பேரை வாழ்நாள் தடை செய்துவிட்டு அத்தேர்வை தொடர்ந்து நடத்துகிறது. இது சம்மந்தமாக சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் "நேர்மையாகத் தேர்வு எழுதியவர்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காகவே தேர்வு ரத்துசெய்யப்படவில்லை" என்று விளக்கம் கொடுத்தார்.
இதேபோல, 2017-இல் TRB நடத்திய அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் 196 தேர்வர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக கண்டுபிடிக்கப்பட்டது. உடனே தேர்வு ரத்து செய்யப்பட்டது. நேர்மையாக தேர்வெழுதி வெற்றி பெற்றவர்கள் பாதிக்கப்பட்டனர். ஆனால், முறைகேட்டில் ஈடுபட்ட 196-பேரை TRB வாரியம் இதுவரை தடை செய்ய வில்லை. யார் அந்த 196 பேர் என்று கூட இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை. தற்போது 2019-இல் TRB-ன் புது அறிவிப்பாணை மூலம் மறுதேர்வு நடக்கும் நிலையில், அந்த 196 தேர்வர்களும் மீண்டும் விண்ணப்பம் செய்துள்ளனரா என்பதும் புதிராக உள்ளது. TNPSC-க்கு ஒரு நியாயம் TRB-க்கு ஒரு நியாயமா, என்று இளைஞர்கள் அதிர்ச்சி அடைத்துள்ளனர்.
2017-ஆம் ஆண்டின் TRB தேர்வு ரத்து செய்தபோது மறுதேர்வுக்கு எந்த விண்ணப்ப கட்டணமும் வசூல் செய்யமாட்டோம் என்று அரசு சார்பில் நீதிமன்றத்தில் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் இன்று மறுதேர்வுக்கு லட்சக்கணக்கான விண்ணப்பதாரர்களிடம் தேர்வு கட்டணம் வசூல் செய்யப்பட்டுள்ளது. இது நீதிமன்ற அவமதிப்பு ஆகும். மறுதேர்வு நடக்கும் முன்னரே பல முரண்பாடுகள் நிறைந்து உள்ளதால், 2019-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட TRB மறுதேர்வை நிறுத்திவைக்க (stay) வேண்டும் என, சமூக சேவகர் திரு.K.M.கார்த்திக் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த பொது நல மனு (Diary no.5193/2020), நீதிபதி. திரு.நாகேஸ்வ்ர் ராவ் அடங்கிய அமர்வு முன் நேற்று (02/03/2020) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மெட்ராஸ் உயர் நீதிமன்றத்திற்கு சென்று வழக்கை நடத்தலாம் என உரிமை வழங்கி, வழக்கை முடித்து வைத்தனர்.
கடந்த 2019-இல் உச்சநீதிமன்றத்தின் இதே அமர்வின் உத்தரவின் பேரிலேயே TRB வாரியம் புது (2019) அறிவிக்கையை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. உச்ச நீதிமன்றத்தின் அறிவுரைப்படி மதுரை அல்லது சென்னை அமர்வின் முன் இந்த வழக்கு விரைவில் எதிர்பார்க்க படுகிறது. இது சம்மந்தமாக மனுதாரரும் சமூக சேவகருமான திரு.K.M.கார்த்திக் கூறியதாவது: விண்ணப்பித்த அனைவரும் ஏமாறும் வகையில் TRB வாரியம் நடந்து கொண்டுள்ளது. TRB வாரியம் தனது இரண்டு அறிவிக்கைகளின் கீழ் விண்ணப்பம் செய்த அணைத்து தேர்வர்களையும் இன்று திருப்தி படுத்தவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஆகவே 2017-ல் நேர்மையான தேர்வெழுதியவருக்கு சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்க வேண்டும். 2019-ன் அறிவிப்பாணையில் நிலுவையில் உள்ள சுமார் 400/500 காலி இடங்களை இணைத்து, புதிதாக சேர்க்கப்படும் அந்த காலியிடங்களுக்கு தேர்வை தொடர்ந்து நடத்த வேண்டும். இந்த வகையில் இரு தரப்பை சேர்ந்த தேர்வர்களும் பலன் அடைவார்கள். மாணவருக்கும் தகுதியான ஆசிரியர் கிடைப்பார்கள். அரசுக்கும் செல்வு மிச்சம், என்றார்.
No comments