Breaking News

மனிதநேய மையம் நடத்தும் சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வுக்கான இலவச பயிற்சி இன்று முதல் முன்பதிவு செய்யலாம் என சைதை துரைசாமி அறிவிப்பு

     மனிதநேய மையம் சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்க உள்ளது. விருப்பமுள்ளவர்கள் இன்று(ஞாயிற்றுக்கிழமை) முதல் முன்பதிவு செய்யலாம் என சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் தலைமையில் மனிதநேயம் ஐ.ஏ.எஸ். இலவச கல்வியகம் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தை சேர்ந்த அனைத்து தரப்பு மாணவ-மாணவிகளும் இந்திய அளவில் ஐ.ஏ.எஸ்.,ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்பட உயர் பதவிகளில் தேர்வு செய்யப்பட வேண்டும் என்கிற உயர்ந்த நோக்கத்தோடு இதில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.

    கடந்த 14 ஆண்டுகளில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ்., இந்திய வனத்துறை ஆகிய பதவிகளிலும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் மற்றும் மாவட்ட நீதிபதி, குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ ஆகிய பதவிகளிலும், தற்போது நடைபெற்று முடிந்த இந்திய வன அலுவலர் பதவிக்கான தேர்வில் தேர்வான 10 பேர் உள்பட 3 ஆயிரத்து 505 பேர் வெற்றி பெற்று அந்த பதவிகளில் இருக்கின்றனர்.இந்த நிலையில் அடுத்த ஆண்டு (2021) நடைபெற உள்ள சிவில்சர்வீசஸ் முதல்நிலை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது. பயிற்சி பெற விரும்பும் மாணவ-மாணவிகள்www.mntfreeias.comஎன்ற இணையதளத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் முன்பதிவுசெய்து கொள்ளலாம்.

     தகுதியும், ஆர்வமும் உள்ள மாணவர்களை (கிராமப்புறம், விவசாயம், விளிம்பு நிலையில் உள்ள குடும்பங்களை சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை) தேர்வு செய்வதற்காக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நுழைவு தேர்வை மனிதநேய மையம் நடத்துகிறது. நுழைவுத் தேர்வு எழுதி அதிக மதிப்பெண் பெறும் மாணவ-மாணவிகளுக்கு தங்கும் விடுதி, உணவு மற்றும் அனைத்து வசதிகளும் இலவசமாக வழங்கப்படும்.

    எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 வகுப்பில் 95 சதவீதம் மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கவும், தகுதியான மாணவர்களை தேர்வு செய்யவும் நுழைவு தேர்வு நடைபெற உள்ளது. தேர்வுக்கான பாடத்திட்டத்தை மனிதநேய இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.நுழைவுத்தேர்வு குறித்த தேதி மற்றும் விவரங்கள் பதிவு செய்து கொள்பவர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி வாயிலாக தெரிவிக்கப்படும்.

    நுழைவுத்தேர்வில் கலந்து கொள்வதற்கு மனிதநேய மையத்தின் இணையதளத்துக்கு சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும்.மேற்கண்ட தகவலை மனிதநேய அறக்கட்டளையின் தலைவர் சைதை துரைசாமி தெரிவித்தார்.


No comments