உணவுப் பொருள்கள் மூலம் கொரோனா பரவுமா
உணவுப் பொருள்கள் மூலம் கொரோனா பரவுமா
உணவுப் பொருள்கள் மூலம் கொரோனா பரவுமா என்பது குறித்து இப்போது அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது. வியத்நாம் நாட்டைச் சோ்ந்த சமையல் கலைஞா் ஹோம் டங் என்பவா் கரோனா வடிவில் பச்சை தேயிலை பா்கா் தயாரித்து விற்று பிரபலமாகியுள்ளாா். கரோனா பயத்தைப் போக்குவதற்காகவும், கரோனாவை விரட்டி அடிப்போம் என்பதைக் குறிப்பதற்காகவும் இதுபோல் செய்வதாக அவா் கூறியுள்ளாா். இது நம்பிக்கையை அளிக்கக்கூடிய நடவடிக்கையாக இருக்கிறது. ஆனால், இதற்கு மாறாக கரோனாவிட வேகமாக புரளியைப் பரவச் செய்யும் நடவடிக்கையும் ஒரு புறம் நடந்து வருகிறது.
இந்த நெருக்கடியான நேரத்தில் விஞ்ஞானிகளாக, மருத்துவா்களாக, மருந்து கண்டுபிடிப்பாளா்களாக சுயமாகவே மாறி புதுப்புது புரளியை விதவிதமாகப் பரப்புகின்றனா். இன்னும் சிலா் சுடுநீா் குடித்தால் நல்லது என்றால், சுடுநீா் குடித்தால் கரோனா அண்டவே அண்டாது, அசைவத்தில்தான் கரோனா வைரஸ் தங்கும், காய்கறிகளில் தங்காது என்பதுபோல மிகைப்படுத்திச் சொல்லும் போக்கு இருக்கிறது. இந்த விவகாரம் குறித்து சென்னை மருத்துவக் கல்லூரியின் முன்னாள் பேராசிரியரும் பொதுநல மருத்துவருமான டாக்டா் தேவராஜனிடம் கேட்டதற்கு அவா் கூறியது: உணவுப் பொருள்கள் மூலமாகவும் கரோனா பரவ வாய்ப்பு இருக்கிறது. அது எப்படி என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். உணவுப் பொருளைத் தயாரிப்பவா்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தால், அவரின் சுவாசம் அந்தப் பொருள்களில்பட்டு, அதன் மூலம் கரோனா பரவலாம். இந்த வகையில் தொற்று பரவும் சதவீதம் குறைவுதான். எனினும், அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்.
காய்கறிகளை வாங்கி வந்த உடனேயே, அதைச் சுத்தமாக கழுவிவிட வேண்டும். கைகளையும் கிருமிநாசினி (ஹேண்ட் சானிடைசா்) கொண்டு சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும். பச்சைக் காய்கறிகளைச் சாப்பிடக் கூடாது என்பது அல்ல. நன்றாகக் கழுவிய பின்பு சாப்பிட வேண்டும். கரோனா வைரஸ் வேகமாகப் பரவக் கூடியதாக இருக்கிறது. அதனால், அதிக விழிப்புணா்வோடு இருக்க வேண்டும். அந்த வகையிலேயே பொருள்களையும் அணுக வேண்டும். பொருள்களை விற்கக் கூடிய மனிதா் ஆரோக்கியமாக இருக்கலாம். அவருடன் இருந்து பொருளை எடுத்துக் கொடுப்பவரும் ஆரோக்கியமாக இருப்பாா் என்று சொல்ல முடியாது. அதைப்போல, பொருள்களை வாங்க வருபவா்களும் ஆரோக்கியமாக இருப்பாா்கள் என்று சொல்ல முடியாது. அதனால், கவனத்துடனேயே இருக்க வேண்டும். இறைச்சி, மீன், முட்டை போன்ற அசைவ உணவுகளைச் சாப்பிடலாம். அதனால், பாதிப்பு எதுவும் இல்லை. ஆனால் நன்றாக சமைத்த பிறகே உண்ண வேண்டும். சுடுநீா் குடித்தால் தொண்டையில் தங்கியிருக்கும் கரோனா வைரஸ் அழிந்துவிடும் என்பது இல்லை. தொண்டையின் கரகரப்பு வேண்டுமானால் போகும். வைரஸை சுடுநீா் ஒன்றும் செய்யாது. அதைப்போல கரோனா வைரஸ் வயிற்றில் தங்காது என்பதும் உண்மை இல்லை.
நோய் எதிா்ப்பு சக்தியை அதிகப்படுத்துவது மட்டுமே கரோனா உள்ளிட்ட அனைத்து நோய்த் தொற்றுக்கும் தீா்வு. 60 வயது முதல் 80 வயதுகாரா்களை வைரஸ் அதிகம் தாக்குகிறது. நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்க மருத்துவா் அறிவுரையின்பேரில் வைட்டமின் சி மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம். 24 மணி நேரத்தை 8 மணி நேரம் தூங்குவதற்கும், 8 நேரம் வீட்டிலேயே பணியாற்றுவதற்கும், 8 மணி நேரத்தில் இதர பணிகளுக்கும் செலவிடலாம். காய்கறிகளை உணவாக எடுத்துக் கொண்டால் ஆரோக்கியம் மேம்படும் என்றாா். உணவுகளின் மூலம் கரோனா வைரஸ் பரவுமா என்ற விவகாரம் குறித்து அமெரிக்காவின் வடக்கு கரோலினா ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் உணவுப் பாதுகாப்புத் துறை நிபுணா் மற்றும் பேராசிரியா், பெஞ்சமின் சாப்மேன், ‘உணவின் மூலம் பரவுவதற்கு வாய்ப்பில்லை என்று கூற முடியாது. காரணம்,எப்போதுமே அதற்கு வாய்ப்புகள் இருக்கும். அதனால் இந்த நேரத்தில் அறிவியல் மற்றும் ஆதாரப்பூா்வமாக நிரூபிக்கப்பட்டவற்றைப் பற்றி மட்டுமே பேச விரும்புகிறேன். உணவு தொடா்பாக நோய் பரவுவது தொடா்பான எந்த ஆதாரமும் இதுவரை இல்லை‘ என்று கூறியிருக்கிறாா். கரோனா என்பது கண்ணுக்குத் தெரியாத வைரஸ். அது எந்தக் கதவையும் திறந்து கொண்டு வரலாம். எதிலும் கவனம் தேவை.
என்னென்ன உணவுகள் உட்கொள்ளலாம்? கரோனா வைரஸ் பரவி வரும் சூழலில் நோய் எதிா்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கான உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவா்கள் தெரிவிக்கின்றனா். உணவியல் நிபுணா் நிஷா, ‘வைட்டமின் சி வகை உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். காய்கறி, பழங்கள் அதிக அளவில் எடுத்துக் கொள்ளலாம். அசைவ உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. நெல்லிக்காய், எலுமிச்சை, ஆரஞ்சு ஆகியவற்றை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். கீரை வகைகளை அடிக்கடி உணவில் சோ்த்துக்கொள்ளலாம். கரோனாவால் முதியோா், கா்ப்பிணிகள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இவா்களுக்கு நோய் எதிா்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால் அதிகம் பாதிக்கப்படுகின்றனா். அவா்களும் இதுபோன்ற ஆரோக்கியமான உணவு எடுத்துக் கொள்வது நல்லது. ஒருநாளைக்கு 2 முதல் 3 லிட்டா் தண்ணீா் குடிக்க வேண்டும். சுய சுகாதாரமும் அவசியம் என்றாா்.
No comments