தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல் ஊரடங்கு நேரத்தில் வெளியே செல்பவர்களை துன்புறுத்த வேண்டாம்
தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல் ஊரடங்கு நேரத்தில் வெளியே செல்பவர்களை துன்புறுத்த வேண்டாம்
சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீல் எம்.எல்.ரவி தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அத்தியாவசிய தேவைகளுக்காக சாலைகளில் நடமாடுபவர்களையும், இருசக்கர வாகனங்களில் செல்வோரையும் போலீசார் லத்தியால் அடித்தும், தண்டனை வழங்கியும் துன்புறுத்தி வருகின்றனர்.கொரோனாவை கட்டுப்படுத்த விட்டமின்கள், தாதுப்பொருட்கள், இரும்பு மற்றும் நார்சத்து அடங்கிய கனி, காய்கறிகளை வாங்கி உட்கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வு கூறி கடைகளை திறந்து வைத்திருந்தாலும், அதை வாங்கச் செல்லும் பொதுமக்கள் மீது போலீசார் லத்தியால் அடித்து வாங்க விடாமல் தடுப்பது மனிதாபிமானமற்ற செயல்.
இதேபோல தினக்கூலிகள், தெரு வியாபாரிகள், வெளி மாநிலங்களில் இருந்து பணிக்கு வந்தவர்கள் என பலரும் உணவு, இருப்பிடம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள். அத்தியாவசிய தேவைகளின்றி சட்டத்தை மீறி நடமாடுபவர்களை போலீசார் கைது செய்யலாமேயன்றி அவர்களை தண்டிக்கக்கூடாது.எனவே, ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும் காரணமின்றி சாலைகளில் நடமாடும் பொதுமக்களை அடித்து துன்புறுத்தக்கூடாது என்று தமிழக உள்துறை மற்றும் டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. நீதிபதிகளும், மனுதாரர் தரப்பு வக்கல் சிவஞானசம்பந்தமும், கூடுதல் அட்வகேட் ஜெனரல் அர்விந்த் பாண்டியனும், அரசு பிளீடர் ஜெயபிரகாஷ் நாராயண் ஆகியோரும் அவரவர் வீடுகளில் இருந்து ஜூம் வாட்ஸ்அப் என்ற ஆப் மூலம் விசாரணையில் பங்கேற்றனர்.
இந்தியாவிலேயே முதன்முறையாக நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த விசாரணை நடந்தது.நீதிபதிகள் கேட்ட கேள்விகளுக்கு கூடுதல் அட்வகேட் ஜெனரல் அர்விந்த் பாண்டியன் பதிலளிக்கும்போது, எந்த ஒரு விதிமுறையும் மீறப்படவில்லை. அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வருபவர்களை போலீசார் தடுப்பதில்லை.
இதுவரை ஊரடங்கை மீறியதாக 17,118 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எப்.ஐ.ஆர். போடப்பட்டுள்ளது. 13,660 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ₹5 லட்சத்து 9030 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. முறையான நடவடிக்கை எடுத்து வருகிறோம். மனுதாரர் பொதுவான குற்றச்சாட்டுகளை கூறுகிறார் என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நாங்கள் குறிப்பிட்ட எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்றாலும் நடுநிலையான அணுகுமுறையை போலீசார் கையாளவேண்டும்.மக்களின் அத்தியாவசிய தேவையை போலீசார் கருத்தில் கொள்ள வேண்டும்.
இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கிய பிரிவு 21 கீழ் வாழும் உரிமை எந்த விதத்திலும் பாதிக்க கூடாது. மனித உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும். நியாயமான காரணங்களுக்காக வெளியே செல்ல நேரும்போது அந்த மக்களுக்கு உரிய ஏற்பாடுகளை அரசு செய்து தரவேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
No comments