Breaking News

பத்தாம் வகுப்புக்கான பொது தேர்வு வினாத்தாள் சமூக வலைதளங்களில்?

    பத்தாம் வகுப்புக்கான பொது தேர்வு துவங்க, இன்னும், 20நாட்கள் உள்ள நிலையில், சமூக வலைதளங்களில் வெளியாகும் வினாத்தாள்களால், மாணவர்கள் குழப்பம் அடைந்து உள்ளனர்.

     தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், பிளஸ் 2 பொது தேர்வு மார்ச், 2ல் துவங்கியது. பிளஸ் 1 பொது தேர்வு மார்ச், 4ல் துவங்கியது. 10ம் வகுப்பு பொது தேர்வு வரும், 27ம் தேதி துவங்க உள்ளது. தேர்வுக்காக, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.இந்நிலையில், 10ம் வகுப்பு தேர்வுக்கான தமிழ் வினாத்தாள் என்ற பெயரில் சில பிரதிகள், சமூக வலைதளங்களில் பரவுகின்றன.

   'ஷேர் சாட்' என்ற தளம் வாயிலாக, வெளியிடப்பட்டுள்ள இந்த வினாத்தாளை, பலரும், 'வாட்ஸ் - ஆப்'பில் பரப்புவதால், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் குழப்பம் அடைந்து உள்ளனர்.எனவே, தமிழக பள்ளி கல்வி துறை அதிகாரிகள், சமூக வலைதளங்களில் பரவும் வினாத்தாள் குறித்து விசாரணை நடத்த வேண்டும். வினாத்தாள், 'லீக்' ஆகாமல், உரிய தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


No comments