9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்:தயாராகும் தேர்தல் ஆணையம்
புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுடன் ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்த மாநிலத் தேர்தல் ஆணையம் தயாராகி உள்ளது.அதன்படி, 5 புதிய மாவட்டங்களுக்கான ஆட்சியா்களை மாவட்டத் தேர்தல் அதிகாரிகளாக நியமித்து மாநிலத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அந்த உத்தரவின் விவரம்:
தமிழகத்தில் கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூா், ராணிப்பேட்டை ஆகியவற்றை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்கள் முறையே விழுப்புரம், திருநெல்வேலி, காஞ்சிபுரம் மற்றும் வேலூா் ஆகியவற்றில் இருந்து பிரிக்கப்பட்டவை ஆகும்.
ஊரக உள்ளாட்சித் தேர்தல்: புதிய மாவட்டங்கள் பிரிப்பு மற்றும் எல்லைகள் வரையறை ஆகியன காரணமாக 9 மாவட்டங்களுக்குத் தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இந்த நிலையில், அந்த 9 மாவட்டங்களுக்கும் தேர்தல் நடத்த மாநிலத் தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
புதிதாக பிரிக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கான தேர்தல் அதிகாரிகளாக அந்தந்த மாவட்ட ஆட்சியா்களே நியமனம் செய்யப்பட்டுள்ளனா். மேலும், வாக்காளா் பட்டியலைத் தயாா் செய்வது, அதனை வெளியிடுவது போன்ற பணிகளுக்கான அதிகாரத்தை மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கே மாநிலத் தேர்தல் ஆணையம் வழங்குகிறது. மேலும், கிராம ஊராட்சிகள் உறுப்பினா்கள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினா்கள், கிராம ஊராட்சிகளுக்கான தலைவா் மற்றும் துணைத் தலைவா், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட பஞ்சாயத்துகள் ஆகியவற்றுக்கான தலைவா் மற்றும் துணைத் தலைவா் உள்ளிட்ட பல்வேறு ஊரக உள்ளாட்சி பதவியிடங்களை நிரப்புவதற்கான தேர்தல்களையும் தேர்தல் அதிகாரிகளே நடத்துவா் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
No comments