தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் நியமிக்கப்பட்ட 3,624 தற்காலிக ஆசிரியர்கள் சம்பளம் கிடைக்காமல் தவிப்பு
தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் நியமிக்கப்பட்ட 3,624 தற்காலிக ஆசிரியர்கள் சம்பளம் கிடைக்காமல் தவிப்பு
தமிழகத்தில் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் நியமிக்கப்பட்ட 3,624 தற்காலிக ஆசிரியர்கள், சம்பளம் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். தமிழகத்தில் தொடக்கக்கல்வி துறையின் கீழ் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 80 ஆயிரத்திற்கும் அதிகமான இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதனிடையே மாநிலம் முழுவதும் உள்ள அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 3,624 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது.
இதனையடுத்து மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு,அந்த காலியிடங்களை தற்காலிக அடிப்படையில் நியமித்துக்கொள்ள தொடக்கக்கல்வித்துறை அனுமதி அளித்தது.அதாவது, தலைமை ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் கழகம்,பள்ளி மேலாண்மைக்குழு மூலமாக தற்காலிகமாக நிரப்பிக்கொள்ளவும், அவர்கள் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய 3 மாதங்களுக்கு பணிபுரியலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. இவர்களுக்கு மாதாந்திர ஊதியமாக, தலா ₹7,500 நிர்ணயிக்கப்பட்டு, ₹8 கோடியே 15 லட்சத்து 40, ஆயிரத்துக்கு அனுமதி அளித்து ஆணை வெளியிடப்பட்டது. இதனிடையே, இந்த அனுமதியின் கீழ் நியமிக்கப்பட்ட தற்காலிக ஆசிரியர்களுக்கு கடந்த மாதத்திற்கான ஊதியம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து தற்காலிக ஆசிரியர்கள் கூறியதாவது: தொடக்கக்கல்வித்துறையில் காலியாக இருந்த 3,624 இடங்களுக்கு, இடைநிலை ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டோம். நாங்கள் பணியில் சேர்ந்த போது 5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்ததால், அதற்கென பாடங்களை நடத்தி மாணவர்களை தயார் செய்தோம். அதன்பின்னர் பொதுத்தேர்வு அறிவிப்பு திரும்ப பெறப்பட்டுவிட்டது.இதனிடையே கடந்த பிப்ரவரி மாதத்திற்கான ஊதியம், இதுவரை யாருக்கும் வழங்கப்படவில்லை.
நடப்பு மாதம் பிறந்து 18 நாட்கள் நிறைவடைந்துவிட்ட நிலையில், சம்பளம் வழங்காததால் கடும் அவதியடைந்து வருகிறோம். நிரந்தர பணியாளர்களாக இருந்தால் கூட, தாமதமானாலும் சேர்த்து வழங்கப்படும். ஆனால், எங்களுக்கு அதுபோன்ற உறுதியை கூட அதிகாரிகள் தர மறுக்கின்றனர். சேலம் உள்பட பல மாவட்டங்களில் இதே நிலை தான் காணப்படுகிறது. எங்களுக்கான தொகுப்பூதியத்திற்கென அப்போதே ₹8 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டது.
மேலும், அந்த தொகையை தாமதமின்றி பெற்றோர் ஆசிரியர் கழகம் அல்லது பள்ளி மேலாண்மைக் குழுவுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. எனவே,தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியத்தை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
No comments