Breaking News

ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் திட்டம் எதுவும் தற்போதைக்கு இல்லை - மத்திய அரசு

ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை- மத்திய அரசு

நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு பிறகும் ஊரடங்கை நீட்டிக்கும் திட்டம் எதுவும் தற்போதைக்கு இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி:
கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் வருகிற ஏப்ரல் 14-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் நாடு முழுவதும் பால் சப்ளை, மருத்துவம் போன்ற அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்து பணிகளும் முடங்கி உள்ளன. கடைகளை குறிப்பிட்ட நேரம் மட்டுமே திறந்து வைக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. பஸ், ரெயில், விமான சேவைகள் நிறுத்தப்பட்டு உள்ளன.



அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. போக்குவரத்தை கட்டுப்படுத்த மாவட்ட, மாநில எல்லைகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறது.

தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், கேரளா போன்ற மாநிலங்களில் வசிக்கும் பிற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் இந்த ஊரடங்கு உத்தரவால் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவிக்கிறார்கள். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் வெளிமாநில தொழிலாளர்கள் ஆங்காங்கே உள்ள சமுதாய நல கூடங்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு அரசின் சார்பில் உணவு வழங்கப்படுகிறது.



இந்த நிலையில், ஊரடங்கு உத்தரவையும் மீறி சில மாநிலங்களில் உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்கிறார்கள். ஒரே நேரத்தில் ஏராளமானோர் செல்வதால் அவர்களுக்கும், அவர்களால் மற்றவர்களுக்கும் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து, வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் செல்வதை தடுத்து நிறுத்துமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது. அவ்வாறு எல்லை தாண்டி செல்பவர்களை பிடித்து 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்கவும் நேற்று உத்தரவு வெளியானது.

இந்த நிலையில், மாநிலங்களை விட்டு மக்கள் இடம்பெயராமல் இருக்க நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநில எல்லைகளையும் மூட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல், இந்தியாவின் அண்டை நாடான நேபாளமும் நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.



இதற்கிடையே, ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு பிறகும் நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்ற தகவலை மறுத்துள்ள மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா, ஊரடங்கை நீட்டிக்கும் திட்டம் எதுவும் தற்போதைக்கு இல்லை என்றார்.

No comments