TNPSC விவகாரம் சட்டசபையில் காரசார விவாதம்: சி.பி.சி.ஐ.டி., வாயிலாக, கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன
அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, தேர்வு முறைகேடு தொடர்பாக, சட்டசபையில், நேற்று காரசார விவாதம் நடந்தது. சட்டசபையில், டி.என்.பி.எஸ்.சி., தேர்வு முறைகேடுகள் தொடர்பாக, தி.மு.க., - எம்.எல்.ஏ., சுதர்சனம், ஒரு கருத்தை தெரிவித்தார். அந்த கருத்தை, சபைக்குறிப்பில் இருந்து, சபாநாயகர் தனபால் நீக்கினார். இதைத் தொடர்ந்து, அமைச்சர் ஜெயகுமார், அதற்கு விளக்கம் அளித்து பேசியதாவது: கிராம நிர்வாக அலுவலர் தேர்வு முதல், பல்வேறு தேர்வுகளை, டி.என்.பி.எஸ்.சி., நடத்துகிறது. இது, ஒரு தன்னாட்சி அமைப்பு. இதன் வாயிலாக, வெளிப்படை தன்மையுடன் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ராமேஸ்வரம், கீழக்கரை ஆகிய, இரண்டு இடங்களில் மட்டுமே, தேர்வு முறைகேடு நடந்ததாக புகார்கள் வந்தன. இதுதொடர்பாக, உரிய விசாரணை நடத்தப்பட்டு, சி.பி.சி.ஐ.டி., வாயிலாக, கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இவ்வாறு, அமைச்சர் பேசினார்.
அப்போது, ஜெயகுமார் தெரிவித்த கருத்துக்கு, எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், பதில் கருத்து தெரிவித்தார். 'ஜெயகுமார் பேசியதை சபைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்' என, தி.மு.க.,வினர் கோஷம் எழுப்பினர். இதையடுத்து, துரைமுருகனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், முதல்வர் இ.பி.எஸ்., ஆவேசமாக பேசினார். இதனால், சபையில் பரபரப்பு எழுந்தது. எம்.எல்.ஏ.,க்கள் எழுந்து நின்று, கோஷம் போட்டனர்.
அப்போது குறுக்கிட்ட, துணை முதல்வர் பன்னீர்செல்வம், ''அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்த விளக்கம் மட்டுமே, சபைக்குறிப்பில் இடம்பெறும். மற்ற விவாதங்கள் அனைத்தும் நீக்கப்படும்,'' என, அறிவித்தார். இதையடுத்து, பிரச்னை முடிவுக்கு வந்தது.
No comments