PGTRB புதிதாக பணியில் சேர்ந்த ஆசிரியர் நண்பர்களுக்கு ....
புதிதாக பணியில் சேர்ந்த ஆசிரியர் நண்பர்களுக்கு வணக்கம்
தங்களின் நீண்டகால இலட்சியப் பயணம் தற்போது நிறைவேறியதில் உங்களைப்போலவே அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சி.
தற்போது வரை உங்களுடைய ஒற்றை நோக்கம் ஆசிரிய பணியில் சேர்வதாக மட்டுமே இருந்திருக்கும்.
பணியில் சேர்ந்தாகிவிட்டது, இனிமேல் நமது பணி சூழலுக்குத் தகுந்தது போல நாம் நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஆசிரியர் பணி அனைவராலும் மதிக்கக் கூடிய, போற்றுதலுக்கு உரியது.
அப்படியான பணி நமக்கு கிடைக்கப் பெற்றதில் நாம் பெரிய பாக்கியவான்கள் என்றே சொல்லலாம்.
அதுவும் அரசு பள்ளியில் ஆசிரியர் என்பது மிகவும் மதிப்புமிக்க அடையாளமாகவே இன்றளவும் பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆசிரியரும் தாங்கள் பாடத்தில் என்னென்ன பாடப்பகுதிகள் உள்ளதோ அதனை முழுமையாகப் படித்து அதை மாணவர்களுக்கு எந்த விதத்தில் எளிமையாக கற்பிக்க முடியும் என்பதனை முதல் வேலையாக செய்யுங்கள்.
ஏனென்றால் நமக்கு பல நல்ல ஆசிரியர்கள் பாடத்தை சொல்லிக் கொடுத்ததன் விளைவாகவே நாம் இன்று ஒரு ஆசிரியர் என்ற நிலைக்கு வந்துள்ளோம். அதுபோலவே நம்மிடம் பயிலும் மாணவர்கள் வாழ்வின் உயர்ந்த நிலையை அடைய ஒரு ஆசிரியர் என்ற நிலையில் நாம் அவர்களுக்கு நமது பாடப்பகுதியை மிகச்சிறப்பாக கற்பிக்கக் கூடிய கடமையுடன் செயல்படவேண்டும்.
ஆதலால் பாடத்தை திரும்ப திரும்ப படித்து புரிந்து கொண்டு கற்பித்தல் பணியை இனிமையாக செய்யுங்கள். உங்களுக்கு பாடம் குறித்த ஏதேனும் சந்தேகங்கள் அல்லது விளக்கங்கள் தேவைப்பட்டால் உங்கள் பாடம் சார்ந்த மூத்த ஆசிரியர்களிடம் அதனைக் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
அரசுப்பள்ளிகளில் சில ஆசிரியர்கள் தங்களிடம் பயிலும் மாணவர்கள் ஏதோ தேர்வில் வெற்றி பெற்றால் போதும் என்ற மனநிலையில் பணியாற்றிக் கொண்டு உள்ளார்கள். அவர்களிடம் தப்பித்தவறி கூட நீங்கள் பழக்கம் வைத்துக் கொள்ள வேண்டாம்.
ஏனென்றால் அவர்களின் நோக்கம் கற்பித்தல் பணி செய்வது அல்ல மாணவர்களை தேர்ச்சி பெற வைப்பது மட்டுமே.
அதேபோல பள்ளியில் சக ஆசிரிய நண்பர்களுடன் இணக்கமான போக்கினை கடைபிடியுங்கள்.
சில ஆசிரியர்களின் போக்கு உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் சற்று ஒதுங்கி நில்லுங்கள். யாரிடமும் மனது சங்கடப் படும் படியாக நடந்துகொள்ள வேண்டாம்.
பிடித்தால் நன்றாக பழகுங்கள். பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கி நின்று உங்கள் வேலையை சிறப்பாக செய்யுங்கள்.
நாம் பள்ளிக்கு வருவது கற்பித்தல் பணி செய்யவே. அந்தப் பணியை நாம் சிறப்பாக செய்தால் மட்டுமே போதும்.
உங்களை முழுவதும் மதிப்பீடு செய்யக் கூடியவர்கள் மாணவர்கள் மட்டுமே. அவர்கள் எனது ஆசிரியர் படத்தை சிறப்பாக கற்பிப்பார் என்று சொன்னாலே போதும். மாணவர்கள் நம்மை குறை சொல்லாத அளவிற்கு நாம் நடந்து கொள்வோம்.
கற்பித்தல் பணியோடு நாம் பராமரிக்க வேண்டிய ஒரு சில பதிவேடுகளை எப்படி பராமரிப்பது என்பதையும் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
அரசுப் பள்ளி மாணவர்களை நல்வழிப் படுத்துவதற்கு நம்மால் முயன்ற செயல்களைச் செய்துகொண்டே இருப்போம்.
நம்மை ஆயிரக்கணக்கானோர் எப்போதும் உற்றுநோக்கி கொண்டே இருக்கிறார்கள் என்ற நினைப்பில் ஒவ்வொரு நிமிடமும் பணியினை சிறப்பாக செய்யுங்கள்.
நாம் மாணவர்களின் நலன் என்ற நோக்கில் செயல் பட்டால் கூட அதனையும் சிலர் தவறாக பயன்படுத்தி நம்மை சிக்கலில் மாட்டிவிட இருக்கிறார்கள். அதனால் ஒவ்வொரு நிமிடமும் கவனமாக நமது பணியினை செய்வோம்.
சில மாதங்களுக்கு ஊதியம் பெறுவது சிரமமாக இருக்கும். அதுவரை பணத்தேவைகளை திட்டமிட்டு சமாளித்துக் கொள்ளுங்கள்.
உடனே உங்களுக்கு தேர்வு பணி, விடைத்தாள் மதிப்பீட்டு பணி போன்றவை வரக்கூடிய சூழல் இருப்பதால் அது பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள்.
கற்பித்தல் பணி குறித்து நண்பர்களுடன் அடிக்கடி கலந்தாலோசித்து ஒவ்வொரு பாடத்தையும் எளிமையாகவும், சிறப்பாகவும் கற்பித்தல் செய்திட உங்களை எப்போதும் ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.
பள்ளிகளில் எந்த ஒரு செயலுக்கும் தேவையில்லாமல் பணம் தர வேண்டாம். குறிப்பாக உங்களுக்கு சம்பளம் போடுவதற்கு பல பள்ளிகளில் பணம் கேட்க கூடிய சூழ்நிலை இருக்கும். அதனை முதலிலே தரமறுத்திடுங்கள்.
ஒருமுறை நீங்கள் பணம் தந்து பழகிக் கொண்டால் ஒவ்வொரு முறையும் கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.
பணம் தருவதற்கு கட்டாயப் படுத்தினால், அதனை எங்களுக்கு தனிப்பட்ட முறையில் தெரிவித்தால் கூட அதுபற்றி உரிய முறையில் நடவடிக்கை எடுத்துக் கொள்ளலாம்.
நாம் நேர்மையாக செயல்படுவோம். மற்றவர்களை நேர்மையாக செயல்பட செய்வோம்.
வாருங்கள் நண்பர்களே, இணைந்து செயல்பட்டு அரசுப்பள்ளிகளை நல்வழியில் நடத்துவோம்.
அன்புடன்,
மூ. மகேந்திரன்,
மாநில செயலாளர்,
நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.
DRPGTA.
No comments