விருது பெற்ற ஆசிரியர்களின் சிறப்புகளைப் பார்த்து வியந்து போனேன்: அன்பாசிரியர் விருது விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் பாராட்டு
விருது பெற்ற ஆசிரியர்களின் சிறப்புகளைப் பார்த்து வியந்து போனேன். ஆசிரியர்களுக்கு எப்போதும் இந்த அரசு உறுதுணையாக இருக்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசினார். தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை மற்றும் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்துடன் இணைந்து 'இந்து தமிழ் திசை' நாளிதழ் நடத்திய 'அன்பாசிரியர் - 2020' விருது வழங்கும் விழா இன்று திருப்பூர் விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
விழாவில் 'இந்து தமிழ் திசை' நாளிதழ் ஆசிரியர் அசோகன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.குணசேகரன், கே.என்.விஜயகுமார், ஏ.நடராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.விழாவில் 88 ஆசிரியர்களுக்கு 'அன்பாசிரியர்' விருது வழங்கப்பட்டது. 'இந்து தமிழ் திசை' இணையத்தில் க.சே. ரமணி பிரபா தேவி எழுதிய 'அன்பாசிரியர்' தொடர் நூல் வடிவம் பெற்றது. இந்நிலையில் 'அன்பாசிரியர்' நூல் இவ்விழாவில் வெளியிடப்பட்டது.
விழாவில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேசும்போது, ''பல்வேறு சாதனைகளைப் படைத்து, அன்பாசிரியர் விருதுகளைப் பெற்ற ஆசிரியர்களுக்கு வாழ்த்துகள். விருதுகளை வழங்கி, புத்தகத்தை வெளியிட்டு, ஆசிரியர்களுக்கு அரிய வாய்ப்பை வழங்கிய 'இந்து தமிழ்' நாளிதழின் ஆசிரியர் உள்ளிட்ட அனைத்து நிர்வாகப் பெருமக்களுக்கும் வாழ்த்துகள். 3 மணிநேரத்துக்கும் மேலாக நடக்கும் இந்நிகழ்ச்சியைச் சிறப்பித்துக் கொண்டிருக்கும் பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி இந்தியாவுக்கே வழிகாட்டியாக உள்ள அமைச்சர் செங்கோட்டையனுக்கு நன்றி.
'அன்பாசிரியர்' விருது மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களின் வாழ்க்கை குறித்து சிறப்பாகச் சொல்லப்பட்டுள்ளது. இதேபோல வரும் காலகட்டங்களிலும் செய்ய வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் 100க்கு 100 சதவீதம் வாங்கிய பள்ளி ஆசிரியர்களை வரவழைத்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கைகளால் விருது வழங்கினோம்'' என்றார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசும்போது, '' எந்தெந்த திசையில் நீங்கள் இருக்கின்றீர்கள் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் 'இந்து தமிழ்' நாளிதழ் திசைகாட்டியாக உள்ளது. அதற்காக என்னுடைய வாழ்த்துகள். ஊருக்குச் செல்லும்போது நாம் எங்கோ நிற்கிறோம் என்பதை வழிகாட்டி வழியைக் காட்டும். இன்று 'இந்து தமிழ்' நாளிதழ் திசைகாட்டியாக இருக்கிறது. அதற்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
அன்பாசிரியர் விருதைப் பெறுவது எவ்வளவு கஷ்டமானது என்பதை எங்களால் உணர முடிகிறது. ஒருகாலத்தின் அன்பைத் தருவதைக் காட்டிலும் ஆசிரியர் கற்றுத் தருவதற்கு எந்தவகையான நடவடிக்கையும் எடுக்கலாம் என்பதை மாற்றி, அன்புடன் பாடத்தை நடத்தினால், செயல்பட்டால் மட்டும்தான் அன்பைப் பெற முடியும். அந்த வகையில் அன்பாசிரியர் விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். தமிழக அரசின் சார்பில், பள்ளிக் கல்வித்துறை சார்பில் கோடான கோடி நன்றிகள்.
விருது பெற்ற ஆசிரியர்களின் சிறப்புகளைப் பார்த்து வியந்து போனேன். கிராமங்களில் உள்ள பள்ளிகளை ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் எவ்வாறு வழிநடத்திச் செல்கிறீர்கள் என்பதைக் காணும்போது ஆசிரியர்களுக்கு இருக்கும் பெருமை குறையவில்லை என்பதை உணர முடிகிறது. ஆசிரியர்களுக்கு எப்போதும் இந்த அரசு உறுதுணையாக இருக்கும்'' என்றார்.
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் குழுவினர் தமிழ் ஓசை சேர்ந்திசை நிகழ்ச்சியை சிறப்பாக வழங்கினர்.
No comments