கல்லூரி பேராசிரியர் பணிக்கு போலி சான்றிதழ் கொடுத்து மோசடி; புதிய மோசடி அம்பலம்
அண்ணா பல்கலையின் இணைப்பு பெற்ற இன்ஜினியரிங் கல்லுாரிகளிலும், பேராசிரியர் பணியில் நடந்த மோசடி அம்பலத்துக்கு வந்துள்ளது. போலி சான்றிதழ் கொடுத்து, பலர் பணிக்கு சேர்ந்ததை பல்கலை நிர்வாகம் கண்டறிந்து உள்ளது. டி.என்.பி.எஸ்.சி., நடத்திய இன்ஜினியர் பதவிக்கான தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக, தேர்வர்கள் புதிய புகார் அளித்துள்ளனர். இந்த தொடர் முறைகேடு மற்றும் மோசடி வரிசையில், அண்ணா பல்கலைக்கு உட்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகளிலும், பேராசிரியர் வேலையை பெற மோசடி நடந்திருப்பது அம்பலமாகியுள்ளது.
அண்ணா பல்கலையின் துணைவேந்தர் சுரப்பா மற்றும் பதிவாளர் அலுவலகத்துக்கு வந்த புகார்கள் அடிப்படையில், இன்ஜினியரிங் கல்லுாரி பேராசிரியர்களின் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. அதில், பல இன்ஜினியரிங் கல்லுாரிகளில் பணியாற்றும் உதவி பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், போலி சான்றிதழ்களை அளித்து, பணியில் சேர்ந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. போலி பட்டப்படிப்பு சான்றிதழ்கள், போலி ஆராய்ச்சி படிப்பு சான்றிதழ்கள், போலி ஆதார் எண், போலி வருமான கணக்கு எண் என, அடுக்கடுக்கான போலி ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த விவகாரம் அண்ணா பல்கலை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக, அரசு கல்லுாரிகளை விட, தனியார் கல்லுாரிகளில் பணியில் சேர்ந்த பல பேராசிரியர்கள், இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீது, கிரிமினல் நடவடிக்கை எடுக்க, பல்கலை நிர்வாகம் முடிவு செய்து உள்ளது. அதற்கு முன், அனைத்து இன்ஜினியரிங், ஆர்கிடெக்ட் கல்லுாரிகளும், தங்கள் பேராசிரியர்களின் உண்மையான ஆவணங்கள், சான்றிதழ்களின் நகல்களை, உடனடியாக அண்ணா பல்கலையின் இணையதளத்தில், 'ஆன்லைன்' வழியாக பதிவேற்றம் செய்யுமாறு, அவசர சுற்றறிக்கை அனுப்பப் பட்டுள்ளது.
No comments