Breaking News

வனத்துறை தேர்வு முடிவிலும் முறைகேடு: தேர்வர்கள் ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு

வனத்துறை தேர்வு முடிவிலும் முறைகேடு: தேர்வர்கள் ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு



   கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட வனத்துறை கார்டு பணிக்கான தேர்வு முடிவுகளில் முறைகேடு நடந்திருப்பதாக தேர்வு எழுதியவர் ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அரசு பணிகளுக்கு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஆளும் அதிமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து அரசு பணிகளுக்கான தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது சமீப காலமாக அதிக அளவில் வெளிவந்து கொண்டு வருகிறது. சமீபத்தில் வெளியான குரூப் 4 மற்றும் குரூப் 2 தேர்வு முடிவுகளில் முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டு சார் பதிவாளர், போலீஸ் எஸ்ஐ உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது படலம் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்பட்ட வனத்துறை பணிக்கான தேர்வு முடிவுகளில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்துள்ளது.



   தென்காசியை சேர்ந்த மாரியப்பன் என்பவர் கடந்த ஆண்டு நடந்த வனத்துறை கார்டு தேர்வு முடிவில் 75 சதவீத மதிப்பெண்கள் பெற்றும், அவருக்கு பணி வழங்காமல், குறைந்த மதிப்பென்கள் பெற்ற தகுதியற்றவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த முடிவில் சந்தேகமடைந்த அவர், இதுகுறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விவரங்கள் கேட்டும் அதற்கு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் தேர்வு குறித்து தேர்வர்களுக்கு விளக்க வேண்டிய அவசியம் இல்லை என பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அரசு தேர்வு முறைகளில் வெளிப்படைத்தன்மை இன்மையும், லஞ்சம் கொடுக்க முடியாத ஏழை, எளியவர்களுக்கு அரசு வேலை கிடைப்பது பெரும் எட்டா கனியாக உள்ளதாகவும் மாரியப்பன் உள்ளிட்ட பலர் ஆதாரங்களுடன் குற்றம்சாட்டி உள்ளனர்.



   மேலும் அவர் கூறுகையில், “வனத்துறையில் கார்டு மற்றும் ஓட்டுனர் பணிக்காக 152 பதவிகளுக்கு கடந்த ஆண்டு தேர்வு நடத்தப்பட்டது. இதில், எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு போன்றவை நடத்தப்பட்டது. ஓட்டுனருக்கான முதலுதவி சான்றிதழ் சரிபார்ப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களை வெளியேற்றிவிட்டு, குறைந்த மதிப்பெண் பெற்ற தகுதியற்றவர்களை பணிக்கு நியமனம் செய்துள்ளனர். அதேபோல், ஆதரவற்ற விதவை பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட 1 இடத்தில் பெண்ணை நியமிக்காமல் அந்த இடத்திற்கு 3 ஆண்களை நியமனம் செய்துள்ளனர். 152 காலி இடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில் 61 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மற்ற இடங்கள் காலியாக உள்ளது. எக்ஸ் சர்வீஸ் மேன் தேர்விலும் முறைகேடு நடந்துள்ளது. ஆகவே என்னை போன்று தேர்வு எழுதி எளிய தேர்வாளர்களின் நலன்கருதி நியமன முறைகேடுகளை களைந்து காலியான இடங்களில் தேர்ச்சி பெற்ற எங்களை நியமனம் செய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.


No comments