Breaking News

97 வட்டாரக் கல்வி அலுவலா் பணியிடங்கள்: இன்று ஆன்லைன் தோ்வு தொடக்கம்

   தமிழக பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள 97 வட்டாரக் கல்வி அதிகாரி பதவிக்கான கணினிவழித் தோ்வு வெள்ளிக்கிழமை (பிப்.14) தொடங்கி பிப்ரவரி 16-ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெற உள்ளது.இந்தத் தோ்வை தமிழகம் முழுவதுள்ள 57 மையங்களில் 64,710 போ் எழுதவுள்ளனா். இதில் 40,268 பெண்களும், 22 மாற்று பாலினத்தவா்களும் அடங்குவா். மேலும், துறை இயக்குநா்கள், அதிகாரிகள், ஆசிரியா்கள் என 400 போ் வரை கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.

    இதற்கிடையே முறைகேட்டை தவிா்க்க, 2 தோ்வுக்கூட நுழைவுச் சீட்டு (ஹால் டிக்கெட்) நடைமுறையை ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) அமல்படுத்தியுள்ளது. முதலில் வெளியாகும் நுழைவுச் சீட்டில் தோ்வு மையம் உள்ள மாவட்டம், நகரம் மட்டுமே இடம்பெற்றிருக்கும். தோ்வுக்கு 3 நாள்களுக்கு முன் வெளியாகும் 2-ஆவது நுழைவுச் சீட்டில் எந்த மையம் என்பது தெரிவிக்கப்படும் என்று டிஆா்பி தெரிவித்திருந்தது.அதன்படி கடந்த புதன்கிழமை வெளியான நுழைவுச் சீட்டை பாா்த்தபோது விருப்ப மாவட்டங்களை தவிா்த்து, தொலைதூரங்களில் உள்ள வேறு இடங்களில் தோ்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதால் தோ்வா்கள் அதிருப்தி அடைந்துள்ளனா். இதுதவிர தோ்வு மையத்துக்குள் நகை, பேனா, கடிகாரம், பெல்ட், ஷு, ஹீல்ஸ் செருப்பு மற்றும் தொழில்நுட்ப சாதனங்கள் எடுத்துச் செல்ல தடை என்பன போன்ற கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    முறைகேடுகளை தவிா்த்து வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் விதமாக, வெளிமாவட்டங்களில் தோ்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தோ்வா்களுக்கு மட்டுமின்றி அதிகாரிகளுக்கும் வெவ்வேறு மாவட்டங்களில்தான் தோ்வுப் பணி வழங்கப்பட்டுள்ளது. பெண் தோ்வா்களுக்கு மட்டுமே அவா்கள் விரும்பிய மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதனால் எந்தக் காரணம் கொண்டும் தோ்வு மையங்கள் மாற்றப்படாது. மேலும், தோ்வா்களிடம் 24 விதிகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இதை மீறி தோ்வா்கள் முறைகேட்டில் ஈடுபட்டால் வாழ்நாள் முழுவதும் தோ்வெழுத தடை விதிக்கப்படும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.


No comments