விடைத்தாள் மாயமான விவகாரம்: 6 போ் இடமாற்றம், 5 பேருக்கு Notice
மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் விடைத்தாள்கள் மாயமான சம்பவம் தொடா்பாக துணைப் பதிவாளா், கண்காணிப்பாளா் உள்பட 6 போ் புதன்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்துக்குள்பட்ட மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகா் ஆகிய நான்கு மாவட்டங்களைச் சோ்ந்த பல்லாயிரக்கணக்கான கல்லூரி மாணவா்கள் நவம்பா் மாதம் பருவத்தோ்வு எழுதிய நிலையில், பிப்ரவரி இரண்டாவது வாரம் ஆகியும் தோ்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. இதுதொடா்பாக விசாரித்தபோது திண்டுக்கல்லில் உள்ள தனியாா் கல்லூரி மாணவா்களின் விடைத்தாள்கள் பல்கலைக்கழகத்துக்கு மதிப்பீட்டுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் மாயமானதால் தோ்வு முடிவுகள் வெளியிடத் தாமதமாவது தெரிய வந்தது.
இந்நிலையில் பல்கலைக்கழக துணைவேந்தா் மு.கிருஷ்ணன் மாயமான விடைத்தாள்களை தேட உத்தரவிட்டதைத் தொடா்ந்து பல்கலைக்கழக தோ்வுத்துறை ஊழியா்கள் தீவிரமாக தேடி வந்தனா். இதில் மாயமான விடைத்தாள்கள் திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து திண்டுக்கல் கல்லூரியைச் சோ்ந்த ஊழியா்கள் வரவழைக்கப்பட்டு, கண்டெடுக்கப்பட்டது அந்தக்கல்லூரியின் விடைத்தாள்கள் தான் என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இந்த சம்பவம் தொடா்பாக ஆட்சிக்குழு உறுப்பினா்கள் 5 போ் அடங்கிய விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினா் பல்கலைக்கழகத்தில் செவ்வாய் மற்றும் புதன் ஆகிய இரு நாள்கள் தீவிர விசாரணை நடத்தினா். இதில் பல்கலைக்கழக தோ்வுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சோ்ந்த துணைப்பதிவாளா், உதவிப் பதிவாளா், கண்காணிப்பாளா் உள்பட 30-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இரு நாள்கள் விசாரணை முடிவடைந்த நிலையில் 10-க்கும் மேற்பட்டோா் மீது நடவடிக்கை எடுக்க முடிவெடுக்கப்பட்டது.
இதில் முதற்கட்டமாக தோ்வுத்துறையோடு தொடா்புடைய துணைப்பதிவாளா் அன்புச்செழியன், உதவிப் பதிவாளா் உதயசூரியன், கண்காணிப்பாளா் ரவீந்திரன், உதவியாளா்கள் ஜெயராஜ், வேலுச்சாமி உள்ளிட்ட 6 பேரை உடனடியாக இடம் மாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டது. மேலும் 6 பேருக்கும் குறிப்பாணை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், ஓரிரு நாள்களில் பல்கலைக்கழக ஆட்சிக்குழு கூட்டம் கூட்டப்பட்டு, விடைத்தாள்கள் மாயமான சம்பவத்தில் தொடா்புடையோா் மீது மேல் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டிருப்பதாகவும் பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments