தனி நபர் வருமான வரியை மத்திய அரசு குறைக்க திட்டம் - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
தனி நபர் வருமான வரியை மத்திய அரசு குறைக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சூசகமாக தெரிவித்தார். டெல்லியில், இன்று நடந்த, இந்துஸ்தான் டைம்ஸ் ஊடக உச்சி மாநாட்டில் நிர்மலா சீதாராமன் பங்கேற்று உரையாற்றினார். அப்போது இந்த தகவலை அவர் வெளியிட்டார்."வரி விகிதக் குறைப்பு திட்டம்" பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க உதவும் என அரசு நினைக்கும் பல விஷயங்களில் ஒன்றாகும்" என்றும் அவர் கூறினார்.
"தனிநபர் வருமான வரி குறைப்பு நாங்கள் பரிசீலிக்கும் பல விஷயங்களில் ஒன்று," என்றும் அவர் கூறினார். தனிநபர் வருமான வரி விவகாரத்தில் எவ்வளவு விரைவில் மக்களுக்கு நிம்மதி கிடைக்கும் என்று கேட்டபோது, "பட்ஜெட்டுக்காக காத்திருங்கள்" என்றார் நிர்மலா சீதாராமன்.
2021 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரியில் சமர்ப்பிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய பொருளாதாரம் ஜூலை-செப்டம்பர் காலகட்டத்தில், 4.5% ஆக இருந்தது. இது ஆறு ஆண்டுகளில் மிக மெதுவான வளர்ச்சியாகும். வளர்ச்சியை ஏறுமுகமாக்க, கடந்த நான்கு மாதங்களாக பல நடவடிக்கைகளை மத்திய அரசு அறிவித்திருந்தாலும், இன்னும் அவை, விரும்பிய முடிவுகளைத் தரவில்லை.
செப்டம்பர் மாதத்தில், நிதி அமைச்சகம் புதிய மற்றும் உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி விகிதத்தை குறைத்து, மந்தநிலைக்கு மத்தியில் வணிகர்களை அதிக முதலீடு செய்ய ஊக்குவித்தது. எந்தவொரு வரி ஊக்கத்தொகையும் பெறாத நிறுவனங்களுக்கு, வரி விகிதம் முந்தைய 30% இலிருந்து 22% ஆக குறைக்கப்பட்டது. எனவே, கூடுதல் கட்டணம் வசூலித்த பின்னர் கார்ப்பரேட் வரி விகிதம் 25.17% ஆக இருக்கும், இதில் செஸ் மற்றும் கூடுதல் கட்டணம் உள்ளடங்கும். கார்ப்பரேட் வரி விகிதக் குறைப்பால், அரசுக்கு, ரூ.1.45 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும். இது நிதிப் பற்றாக்குறையை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments