Breaking News

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, முன்கூட்டியே பாடப் புத்தகம் வழங்க வேண்டும்

       ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, முன்கூட்டியே பாடப் புத்தகம் வழங்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது. மத்திய அரசின் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, பொதுத் தேர்வு நடத்துவது குறித்து, மாநில அரசுகள் பரிசீலிக்கலாம் என, மத்திய அரசு அறிவித்தது. அதை ஏற்று, தமிழகத்தில், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, நடப்பு கல்வி ஆண்டில், பொதுத் தேர்வு நடத்தப்படும் என, பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது. ஆனால், இந்த வகுப்புகளுக்கு பாடப் புத்தகங்களை தவணை முறையில், ஒவ்வொரு பருவமாக வழங்குவதால், பாடம் எடுப்பதற்கே போதிய அவகாசம் இல்லாமல், ஆசிரியர்கள் தவிக்கின்றனர். புத்தகம் வழங்குவதை சரி செய்யும் முன், பொதுத் தேர்வை அரசு அறிவித்துள்ளது.


      அதனால், ஐந்து, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு தொடர்பாக, மாணவர்களுக்கு பல பள்ளிகள், தற்போதே அழுத்தம் தருகின்றன. எனவே, பல மாணவர்களும், பெற்றோரும் அச்சத்தில் உள்ளனர்.இந்நிலையில், பாடப் புத்தகமாவது விரைந்து வழங்கப்படுமா என, ஆசிரியர்கள் தரப்பில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இரண்டாம் பருவத் தேர்வான அரையாண்டு தேர்வு, வரும், 13ம் தேதி முதல் நடக்க உள்ளது. இந்த தேர்வு முடிந்ததும், விடுமுறை விடப்பட்டு, மூன்றாம் பருவ பாடங்கள் நடத்தப்படும். இந்த ஆண்டு பொதுத் தேர்வு நடத்தப்பட உள்ளதால், மூன்றாம் பருவ பாடங்களை முன்கூட்டியே முடித்தால் மட்டுமே, முந்தைய பருவ பாடங்களுக்கு, மாணவர்களுக்கு பயிற்சி வழங்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. 


        எனவே, மூன்றாம் பருவ பாடப் புத்தகங்களை முன்கூட்டியே வழங்கினால், விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் எடுக்க வசதியாக இருக்கும் என, ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் தரப்பில் கூறப்படுகிறது. முன்கூட்டியே புத்தகத்தை வழங்காவிட்டால், பொதுத் தேர்வுக்கு, மூன்றாம் பருவத் தேர்வை மட்டுமே வைக்க வேண்டும். மற்ற பருவ பாடங்களின் வினாக்கள் இடம்பெறக் கூடாது என, பெற்றோர் தரப்பிலும் வலியுறுத்தப்படுகிறது. இது குறித்து, பள்ளி கல்வி அதிகாரிகள், உரிய முடிவு எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.






No comments