Breaking News

அரசு பள்ளிகளில், நிர்வாகம் மற்றும் தோட்ட பராமரிப்பு பணியாளர் காலியிடங்களை நிரப்ப அரசு அனுமதி

     அரசு பள்ளிகளில், நிர்வாகம் மற்றும் தோட்ட பராமரிப்பு பணியாளர் காலியிடங்களை நிரப்ப, பள்ளி கல்வி இயக்குநரகத்துக்கு, அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகம் முழுவதும், 37 ஆயிரம் அரசு பள்ளிகள் செயல்படுகின்றன. அவற்றில், 24 ஆயிரம் தொடக்க பள்ளிகள், 7,000 நடுநிலை பள்ளிகள், 3,100 உயர்நிலை மற்றும் 3,050 மேல்நிலை பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில், 2.26லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். பள்ளிகளின் நிர்வாக பணி, வளாக பராமரிப்பாளர், காவலாளி உள்ளிட்ட பதவிகளில், சில பள்ளிகளில் மட்டுமே ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.நிர்வாக பணி, எழுத்தர் போன்ற பணிகளுக்கு, ஆசிரியர்களே பயன்படுத்தப்படுகின்றனர். அதனால், பள்ளிகளில் ஆசிரியர்களின் வகுப்பு எடுப்பது பாதிக்கப்படுகிறது.

       இதை தடுக்கும் வகையில், அனைத்து பள்ளிகளிலும், நிர்வாக பணியாளர் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு ஆட்களை நியமிக்க, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, பள்ளிகளில் பதிவு எழுத்தர், அலுவலக உதவியாளர், வளாக பராமரிப்பாளர், தோட்ட பராமரிப்பாளர், காவலாளி உள்ளிட்ட பதவிகளில், புதிய ஆட்களை நியமிக்க, பள்ளி கல்வித்துறைக்கு அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர்.


No comments