Breaking News

பள்ளி மாணவர்களுக்கு தினமும் 15 நிமிடம் உடற்பயிற்சி - பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை

    பள்ளி மாணவர்களுக்கு தினமும் 15 நிமிடம் உடற்பயிற்சி: பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், மாணவர்களுக்கு உடற்பயிற்சி வழங்குவது குறித்து பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில், மாணவர்களுக்கு தினமும் 15 நிமிடம் உடற்பயிற்சி வழங்க பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று (நவ.28) தனது டுவிட்டர் பக்கத்தில், பள்ளிகளில் உடற்பயிற்சி வழங்குவது பற்றி டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில் அவர், ‘தமிழக அரசின் சார்பில், பள்ளி துவங்குவதற்கு முன்பு மாணவர்களுக்கு 15 நிமிடங்கள் உடற்பயிற்சி (Physical Exercise) தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

     அதற்கான சுற்றறிக்கை உடனடியாக வழங்கப்படும். மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, விடுமுறை நாட்களில் அவர்களுக்கு Skill Training அளிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதன் மூலம், மாணவர்களுக்கு +2 முடித்தவுடன் வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். இதற்கான பணிகள் விரைவில் நிறைவேற்றப்படவுள்ளது’. இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், பள்ளிகளில் மாணவர்களுக்கு உடற்பயிற்சி வழங்குவது குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதன்படி, காலையில் 15 நிமிடங்களும், மாலையில் 15 நிமிடங்களும் உடற்பயிற்சி நடத்தப்பட வேண்டும். மேலும், மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த உடற்பயிற்சி நடைமுறைப்படுத்தியதற்கான அறிக்கைகளும் பள்ளி நிர்வாகம் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மூலம் மாணவர்களுக்கு உடற்கல்வி பயிற்சி அளிக்கப்படுகிறது. உடற்கல்வி ஆசிரியர்கள் அல்லாத பள்ளிகளில், இசை, நடனம், ஓவியம் போன்ற சிறப்பு ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு தினமும் 15 நிமிடம் உடற்பயிற்சி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



No comments